
லண்டன்,
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரே மாற்றமாக பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக பும்ரா இடம் பிடித்தார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி களமிறங்கினர். வழக்கமாக அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து அணி இந்த முறை பொறுமையாக விளையாடியது. நிதானமாக இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரிந்தது.
இந்த இன்னிங்சின் 14 ஓவரை வீசிய நிதிஷ் ரெட்டி அந்த ஓவரில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பென் டக்கெட் (23 ரன்கள்), ஜாக் கிராலி (18 ரன்கள்) இரண்டு பேரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.
தற்போது ஆலி போப் - ஜோ ரூட் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். ஜோ ரூட் அரைசதம் கடந்த நிலையிலும், ஆலி போப் அரைசதத்தை நோக்கியும் பேட்டிங் செய்து வருகின்றனர். இவர்களது பார்ட்னர்ஷிப் 100+ ரன்களை கடந்து செல்கிறது.
இதனிடையே இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் பாதியில் வெளியேறினார். பும்ராவின் பந்துவீச்சில் 2 முறை கையில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பெவிலியன் திரும்பினார். அவருக்கு பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார். அவரது காயத்தின் தன்மை குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை. தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரும் ரிஷப் பண்டின் காயத்தன்மை குறித்து பரிசோதித்து வருகிறார்.