3 முக்கிய கிரக பெயர்ச்சிகள்.. மாற்றங்களை ஏற்படுத்தும் ஆங்கில புத்தாண்டு 2025

3 weeks ago 4

நிகழும் மங்களகரமான குரோதி வருடம், தட்சிணாயன புண்ணிய காலம், ஹேமந்த ருது, மார்கழி மாதம் 16-ம் நாள் பின்னிரவு, 17-ம் நாள் முன்னிரவு, செவ்வாய்க்கிழமை பின்னிரவு, புதன்கிழமை முன்னிரவு, வளர்பிறை பிரதமை, பூராடம் நட்சத்திரம், சித்தயோகம், கன்னி லக்னம், தனுசு ராசி என்ற அமைப்பில், இரு சுபர்களான லக்னாதிபதி புதனும், ராசியாதிபதி குருவும் சம சப்தம பார்வை பெற்ற சுப அம்சம் கொண்ட நள்ளிரவு 12.01 மணிக்கு 2025-ம் ஆண்டு (ஆங்கில வருடம்) மங்களகரமாக பிறக்கிறது.

இந்த ஆங்கிலப் புத்தாண்டு மற்ற புத்தாண்டுகளை விட பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் விதத்தில் பிறக்கிறது. ஏனென்றால், இந்த ஆண்டில் மூன்று முக்கியமான கிரக பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. திருக்கணித முறைப்படி மார்ச் மாதத்தில் சனி பெயர்ச்சியும், மே மாதத்தில் குரு பெயர்ச்சியும், ராகு-கேது பெயர்ச்சியும் நடக்க உள்ளன. ஒரே ஆண்டில் மூன்று முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறுவது, உலக அளவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதற்கான தொடக்கமாக அமையும் அரிய ஜோதிட நிகழ்வாகும்.

அதனால் 2025-ம் ஆண்டில் இறைவன் அனுக்கிரகம் மீது நம்பிக்கை ஏற்படும் விதமாக, பல்வேறு அதிசய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. லக்னாதிபதி புதன் மூன்றாமிடத்தில் இருந்து குருவின் பார்வை பெறுகிறார். அதனால், பெண்கள் முன்னேற்றம், அறுவை மருத்துவம், பத்திரிக்கை, எழுத்து, ஆசிரியர், கணிதம், ரசாயனம், தகவல் தொழில்நுட்பம், வழக்கறிஞர், புத்தக வெளியீடு ஆகிய துறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

குருவின் திரிகோண சஞ்சாரம் மற்றும் பார்வை காரணமாக திருமணத்திற்கு காத்திருக்கும் இளம் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த தம்பதியினருக்கு சத்சந்தான பாக்கியம் ஏற்படும். கடன் தொல்லை, தீராத நோய்களால் கஷ்டப்பட்டோருக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் பெருகும். இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிவார்கள் என்பதால் இந்த ஆங்கிலப் புத்தாண்டை இளைய தலைமுறையினருக்கான ஆண்டு என்றே கூறலாம்.

சுக்கிரன், சனி இணைவு காரணமாக கலைஞர்கள் முன்னேற்றம் அடைவார்கள். சினிமா, தொலைக்காட்சி ஆகிய துறையினர் நல்ல வளர்ச்சி பெறுவார்கள். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும். தனதானிய விருத்தி ஏற்படும். மக்களின் பொருளாதார நிலை உயரும். சாதாரண மனிதர்கள் பலரும் இந்த ஆண்டு சாதனை மனிதர்களாக உலா வருவார்கள்.

கட்டுரையாளர்: சிவகிரி ஜானகிராம்

Read Entire Article