
பல்லகெலே,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷெர்பேன் ரூதர்போர்டு 80 ரன்கள் எடுத்தார்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த இலங்கை 38.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 190 ரன் எடுத்து வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 62 ரன்கள் எடுத்தார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி வரும் 26ம் தேதி நடைபெறுகிறது.