288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது மகாராஷ்டிராவில் நவ.20ல் தேர்தல்: ஜார்க்கண்ட்டில் நவ.13,20ல் ஓட்டுப்பதிவு, நவ.23ல் ஓட்டு எண்ணிக்கை

1 month ago 5

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. காஷ்மீரில் செப்.18,25, அக்.1 என 3 கட்டமாக நடந்த தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை பிடித்தது.

அங்கு புதிய முதல்வராக உமர்அப்துல்லா இன்று பதவி ஏற்க உள்ளார். அரியானாவில் அக்.5ல் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் பா.ஜ தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. நயாப்சிங் சைனி முதல்வராக நாளை பதவி ஏற்பார் என்று தெரிகிறது. இதே போல் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவ.26ம் தேதி முடிவுக்கு வருகிறது. அங்கு சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), பா.ஜ, தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) கூட்டணி ஆட்சி நடக்கிறது.

முதல்வராக ஏக்நாத் ஷிண்டே உள்ளார். வழக்கமாக மகாராஷ்ரா சட்டப்பேரவைக்கு அரியானா சட்டப்பேரவையுடன் தேர்தல் நடத்தப்படும். 2019ல்அக்.21ல் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மகாராஷ்டிராபேரவை தேர்தல் தேதி அரியானா வுடன் நடத்தப்படவில்லை. இதுபற்றி கேட்டதற்கு விரைவில் அறிவிக்கப்பட உள்ள ஜார்க்கண்ட் பேரவையுடன் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட்பேரவையின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5ம் தேதி வரை உள்ளது.

அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஹேமந்த் சோரன் உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019ம் ஆண்டு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிரா சட்டப்பேரவையுடன், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை சேர்த்து நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக இரு மாநிலங்களிலும் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் சென்று ஆய்வு நடத்தினர்.

நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவ.13 மற்றும் நவ.20 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அங்கு மொத்தம் உள்ள 81 தொகுதிகள் உள்ளன. 2.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதற்கட்டமாக 43 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல்செய்ய அக்.25ம் தேதி கடைசி நாள். அக்.28ல் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. அக்.30ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள். நவ.13ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 2ம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு நவ.20ல் தேர்தல் நடக்கிறது. அங்கு வேட்பு மனுத்தாக்கல் அக்.22ல் தொடங்குகிறது. அக்.29ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசிநாள். அக்.30ல் வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது.

நவ.1ம் தேதி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவ.20ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் அக்.22ல் தொடங்குகிறது. அக்.29ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

அக்.30ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. நவ.4ம் தேதிவரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

* வாக்கு எண்ணிக்கை அப்டேட் தாமதமா?
வாக்கு எண்ணிக்கை அப்டேட் தேர்தல் ஆணைய இணையதளத்தில் தாமதமாக செய்யப்படுவதாகவும், அதில் குளறுபடி நடந்ததாகவும் கூறப்படுவது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் கூறுகையில்,’ வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போது, ​​காலை 8:05 மற்றும் 8:10 மணி முதல் முடிவுகள் ஊடகங்களில் வரத் தொடங்கும். இது முட்டாள்தனம். ஆனால் தேர்தல் ஆணைய நடவடிக்கைப்படி எங்கள் வாக்கு எண்ணிக்கை முறைப்படி காலை 8:30 மணிக்குதான் தொடங்குகிறது.

இதனால் முதற்கட்ட முன்னிலை மாறுகிறது என்ற கேள்வி ஆச்சர்யமாக உள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் காலை 9:30 மணி முதல் இரண்டு மணி நேர இடைவெளியில் முடிவுகளை வெளியிட்டு வருகிறது. வாக்கு எண்ணும் நிலையங்களில் ஒரு ஊடக நிறுவனத்தின் நிருபர் முன்கூட்டியே முடிவுகளைப் பெற முடியும். ஆனால் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கும் முன்பு வாக்குச் சாவடி முகவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும். இன்னும் சில நடைமுறைகள் உள்ளன. எனவே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வர 30 நிமிடங்கள் தாமதம் ஆகலாம்.

எனவே, உண்மையான முடிவுகள் வரத் தொடங்கும் போது, ​​ஒரு பொருத்தமின்மை உள்ளது. அந்த பொருத்தமின்மை சில நேரங்களில் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எதிர்பார்ப்புகளுக்கும், முடிவுகளுக்கும் இடையிலான இடைவெளி விரக்தியைத்தான் ஏற்படுத்தும். மேலும் வாக்காளர்கள் தேர்தல் செயல்பாட்டில் நம்பிக்கை உள்ளது. அதைத் தவிர என்னால் முடியும். சிலர் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். இதை செய்வது மட்டுமே அவர்களது வேலை. அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாதபோது, ​​நிறைவேறாத ஆசைகளுக்காக தேர்தல் ஆணையத்தைக் குறை கூறுவது முறையல்ல’ என்றார்.

* கருத்துக்கணிப்புகள் குறித்து சுயபரிசோதனை வேண்டும்
தலைமை ேதர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் கூறுகையில்,’ எக்சிட் போல்கள் எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் பெரும் கவனச்சிதறலை உருவாக்குகின்றன. இது ஊடகங்களுக்கு, குறிப்பாக மின்னணு ஊடகங்களுக்கு சுய சுயபரிசோதனைக்கான விஷயம். அந்த முடிவு எப்படி வந்தது, அந்த முடிவுடன் தேர்தல் முடிவு பொருந்தவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். தேர்தல் முடிந்து மூன்றாவது நாளில் எண்ணும் பணி நடக்கிறது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் கருத்துக்கணிப்புகள் வெளியாகின்றன. இதற்கு எந்த அறிவியல் அடிப்படை ஆதாரமும் இல்லை’ என்றார்.

* மகாராஷ்டிராவில் 7 எம்எல்சி திடீர் நியமனம்
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா சட்டமேலவைக்கு புதிதாக 7 எம்எல்சிக்கள் கவர்னரால் நியமிக்கப்பட்டனர். இவர்களில் பாஜவை சேர்ந்தவர்கள் 3 பேர், சிவசேனா , தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலா 2 பேரும் எம்எல்சி ஆகினர். 7 பேரும் அவசர கதியில் உடனடியாக பதவியேற்றனர். 12 நியமன எம்எல்சி இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே ஏற்பட்ட உட்பூசல் காரணமாகவே 7 பேருக்கு மட்டுமே பதவி தரப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெயர்கள் மட்டும் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

* 48 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல்
நாடு முழுவதும் காலியாக உள்ளன 48 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகள், பீகாரில் 4 , சட்டீஸ்கரில் 1, குஜராத்தில் 1, கர்நாடகாவில் 3, கேரளாவில் 2 சட்டப்பேரவை மற்றும் வயநாடு எம்பி தொகுதி, மத்தியபிரதேசத்தில் 2 சட்டப்பேரவை தொகுதி, மகாராஷ்டிராவில் நான்டெட் மக்களவை தொகுதி, மேகாலயாவில் 1, பஞ்சாப் மாநிலத்தில் 4, ராஜஸ்தான் மாநிலத்தில் 7, சிக்கிம் 2, உபி 9, உத்தரகாண்ட் 1, மேற்குவங்கத்தில் 6 தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஜார்கண்ட்டில்ஜேஎம்எம்-காங். கூட்டணி உறுதி
ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேசவ் மஹ்தோ கூறுகையில், மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். நாங்கள் செய்த வளர்ச்சி பணிகளின் அடிப்படையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.

* நவ.13ல் வயநாடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நடந்து முடிந்த தேர்தலில் கேரளமாநிலம் வயநாடு, உபி மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதில் வயநாடு எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார். இங்கு நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்படும்.

* தீபாவளி விற்பனை பாதிக்கும் அபாயம்
அக்.31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் முக்கிய உற்பத்தி பொருட்கள் சப்ளை மையமாக மகாராஷ்டிரா உள்ளது. எனவே தீபாவளி விற்பனை பாதிக்காத வகையில் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரும் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதைப்பற்றி பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்து இருந்தார். எனவே நவம்பரில் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு 15 நாள் முன்னதாக தேர்தல் தேதி அறிவித்து இருப்பதால் விற்பனை பாதிப்பு அபாயம் இருப்பதாவும், தீபாவளி வர்த்தகம் பாதிக்கப்படும் என்றும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

* நகர்ப்புறத்தில் அதிகம் பேர் ஓட்டு போட அழைப்பு
நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்டில் நகர்புறங்களில் அதிக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

* மகாராஷ்டிரா பிரசாரத்திற்கு வெறும் 15 நாள் தானா?
மகாராஷ்டிரா தேர்தலை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். வெறும் 35 நாளில் தேர்தல் நடைமுறைகளை முடிப்பதால் 15 நாள் மட்டுமே பிரசாரத்திற்கு கிடைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. உத்தரப் பிரதேசத்துக்கு (403) அடுத்தபடியாக இரண்டாவது பெரியதும், 288 உறுப்பினர்களை கொண்டதுமான மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு குறுகிய காலத்தில் தேர்தல் நடத்துவது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான விஜய் வடெட்டிவார் கூறுகையில், ‘பொதுவாக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யவும், வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் குறைந்தபட்சம் 40 நாட்கள் அவகாசம் அளிக்கிறது.

ஆனால் இந்த முறை 35 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கத்திற்கு மாறானது. இதனால் பிரசாரம் செய்வதற்கு குறைந்த நேரம் மட்டுமே கிடைக்கும்’ என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்சந்திர பவார்) மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ‘மஹாராஷ்டிராவில் மக்களவை தேர்தலை ஐந்து கட்டங்களாக தேர்தல் ஆணையம் நடத்தியது. ஆனால் தற்போது ஒரே கட்டமாக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளது. பிரசாரத்திற்கு 15 நாள் மட்டுமே உள்ளது.

இதுபோதுமானது இல்லை’ என்றார். சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘ மக்களவை தேர்தலை ஒப்பிடும்போது, ​​சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். தொகுதி பங்கீடு குறித்து கவலைப்பட தேவையில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து பல எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் சரியாக பதிலளிக்கவில்லை’ என்றார்.

The post 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது மகாராஷ்டிராவில் நவ.20ல் தேர்தல்: ஜார்க்கண்ட்டில் நவ.13,20ல் ஓட்டுப்பதிவு, நவ.23ல் ஓட்டு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article