ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில், முதற்கட்டமாக கிழக்கு தொகுதிக்குள் உரிமம் பெற்று தற்காப்பிற்காக வைத்துள்ள ஒற்றை குழல், இரட்டை குழல் துப்பாக்கிகள், ரைபிள், பிஸ்டல் போன்ற துப்பாக்கிகளை உரிமையாளர்கள் உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஈரோடு கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டிருந்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 286 துப்பாக்கிகள் உரிமம் பெறப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் இருந்து வருகிறது. இதில் கருவூல பாதுகாப்பு, வங்கி பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு பணிக்கு 13 துப்பாக்கிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தை விதிமுறை உள்ள காலத்திலும் வைத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 253 துப்பாக்கிகளை தேர்தல் பாதுகாப்பு கருதி உரிமதாரர்களிடம் இருந்து பெறப்பட்டு, பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் ஆனதும் உரிமதாரர்களிடம் துப்பாக்கிகள் மீண்டும் ஒப்படைக்கப்படும்’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post 253 துப்பாக்கிகள் பறிமுதல் appeared first on Dinakaran.