சென்னை,
தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.