சென்னை குளத்தூரைச் சேர்ந்த பூஜாவுக்கு வயது 24 தான். இக்கால தலைமுறையிடம் பொறுப்பில்லை மற்றும் எதிர்காலம் குறித்த பயமே இல்லை என புலம்பினாலும் அதில் விதி விளக்காக ஒரு சில இளைஞர்கள் தங்களது பாதையில் கடினமாக உழைத்து முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சில பெண்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஆச்சரியத்தையும் கொடுக்கிறார்கள். பூஜாவுக்கு 24 வயது தான் ஆகிறது சொந்தமாக ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம் துவங்கி வெற்றிகரமாக அதை நடத்தி வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த வேளையிலேயே அவருடைய அப்பா இறந்துவிட அம்மாவின் முழுமையான ஆதரவால் அவருடன் இணைந்து தற்போது இந்த டெக்ஸ்டைல் கடையை நடத்தி வருகிறார் இத்தனை சின்ன வயதில் எப்படி சாத்தியம்? தனது வெற்றி ரகசியம் குறித்து பேசத் துவங்கினார் பூஜா. ‘ சென்னை தான் எனக்கு சொந்த ஊர். எம்.ஒ. பி வைஷ்ணவா கல்லூரியில் தான் படிச்சேன். படிக்கும் பொழுதே கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி வேலையிலும் சேர்ந்தேன். இந்த இடைப்பட்ட வேளையில் அப்பாவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்து இறந்துட்டார். அப்பா பெயர் அசோக் குமார். அம்மா பெயர் சித்ரா. அப்பா இறந்த பிறகு அம்மா டெய்லர் வேலை பார்த்து தான் என்னையும் பார்த்துக்கிட்டாங்க. இதற்கிடையில் நானும் ஒரு பிரபல ரெடிமேட் கடையில் வேலை பார்த்துட்டு இருந்தேன்’ என்னும் பூஜா தனது நண்பரின் கடையிலும் சேர்ந்து வேலை செய்யத் துவங்கியிருக்கிறார்.
‘ நான் வேலை பார்த்துகிட்டு இருந்த கடையிலேயே இன்னொரு நண்பர் தனியாக கடை வைக்கும் திட்டத்தில் இருந்தாங்க. அவங்களுக்கும் உதவிகரமாக ஸ்டாக் வாங்குவது, பல மாநிலங்களுக்கு சென்று டிரஸ் கொள்முதல் இதில் எல்லாம் நானும் உடன் இருந்தேன். பகல் நேரத்தில் கம்பெனி வேலை, சாயங்காலத்துக்கு மேல் ஃப்ரண்ட் கடையில் வேலை என இரண்டு வேலைகளா பிரிச்சு தொழிலையும் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்படியான வேளையில்தான் என்னுடைய நண்பரே நீயும் ஏன் தனியாகக் கடை வைக்கக் கூடாது அப்படின்னு கேட்டார்’ அந்தக் கேள்விதான் தன்னை தற்போது ஒரு கடைக்கு முதலாளியாக மாற்றி இருக்கிறது என்கிறார் பூஜா. ‘ ஆரம்பத்தில் புதியதாக கடை அதற்கு லோன், கடைக்கு தேவையான ஸ்டாக் இதெல்லாம் யோசிக்கும்போதே பெரிய மலையை புரட்டப் போகிற மாதிரி இருந்தது. ஆனால் என்னுடைய ஃப்ரண்டும் அம்மாவும் கொடுத்த ஊக்கம் என்னைத் தொடர்ந்து செயல்பட வெச்சது. பெங்களூரு, ஹைதராபாத் இப்படி பல ஊர்களுக்கு பயணித்து லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்ன, அங்கே இருக்கும் விலை நிலவரம் புதியஃ பேஷன் இப்படி எல்லாத்தையும் முழுமையா கத்துக்க ஆரம்பிச்சேன். உடனடியா கடை வைக்க என்கிட்ட போதுமான பணம் இல்லை ஆனால் நகை சீட்டு சேர்த்து வைத்திருந்தேன். அதற்கான நகையை வாங்கி அந்த நகையை அப்படியே அடமானம் வைத்து கடைக்கான அட்வான்ஸ், ஸ்டாக் , அடுத்தடுத்த செயல்பாடுகள் என்னை அறியாமல் வேகமாக நடக்க ஆரம்பித்தது. அம்மாவும் எனக்கு முழுமையா ஆதரவா நின்னாங்க’ என்னும் பூஜா தற்போது சொந்தமாகவே உடைகளை டிசைனிங் செய்தும் விற்பனைக்கு கொடுக்கிறார்.
‘ மத்த ஜவுளி கடைக்கும் என்னுடைய ஜவுளி கிடைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் எங்ககிட்ட மார்க்கெட் ப்ராடெக்டும் இருக்கும், மேலும் சொந்தமாக தனித்துவமாக டிசைனிங் செய்து கேட்கிறவர்களுக்காக பொட்டிக்கும் இருக்கு. அம்மா டெய்லரிங் வேலையை என்னுடைய ஜவுளிக்கடையுடன் சேர்த்து செய்ய ஆரம்பிச்சாங்க. இந்த மாதிரி டிசைனில் உடை வேணும் அப்படின்னு கேட்கிறவங்களுக்கு கஸ்டமைஸ்டு உடைகளும் டிசைன் செய்து தருகிறோம். இது போக ஆரி பிளவுஸ், ஃபேன்சி பிளவுஸ், குழந்தைகளுக்கான உடைகளும் அம்மா தைத்துக் கொடுக்குறாங்க. இப்போதெல்லாம் நானே தனி ஆளாக பெங்களூரு, ஹைதராபாத் இப்படி அடுத்த மாநிலங்களுக்கு போய் கடைக்குத் தேவையான ஸ்டாக் வாங்கறேன். ஒருமுறையாவது சூரத் போய் அங்கே இருக்கும் விலை நிலவரம் ஃபேஷன் ட்ரெண்ட் இதெல்லாம் கத்துக்கணும். அதற்கான முயற்சியும் செய்துட்டு இருக்கேன். என்கிட்ட வேலைக்கும் ஒரு பெண் இருக்கிறாங்க. இன்னும் கடையை அடுத்தடுத்த கிளைகளா வேற வேற பகுதிகளிலும் ஆரம்பிக்கணும்னு ஆசை இருக்கு. அதற்கு முன்பு இன்னும் இந்தியா முழுக்க இருக்கும் அத்தனை ஜவுளி சார்ந்த மாநிலங்களுக்கும் பயணிக்கணும். அங்கே இருந்து இங்கே பொருட்களை கொண்டு வருவதற்கான வழிகளை செய்யணும். இப்படி அத்தனையும் ஒரு 45 வயது தொழிலதிபர் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி பொறுப்புடன் பேசுகிறார் பூஜா.
‘என்னுடைய மூலதனம் என்னுடைய கஸ்டமர்தான். அவர்களிடம் உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசுவேன். அதன் மூலமாகவே லேட்டஸ்ட் ட்ரெண்ட், சமீபத்திய வைரல் ஃபேஷன் என்ன, இப்படி அத்தனையும் கேட்டு தெரிஞ்சிக்குவேன். எந்தத் தொழிலானாலும் நம்மை நாடி வரும் கஸ்டமர்களுக்கு உண்மையாக அன்பாக நாம் கவனிப்புக் கொடுத்தாலே போதும் நம் தொழில் தானாக வளரும். அதேபோல் நம்மை தேடி வரும் கஸ்டமர்களுக்கு குறைந்தபட்சம் பதில் சொல்லவாவது நாம் இல்லை என்றாலும் பரவாயில்லை நம் சார்பில் ஒருவராவது அந்த இடத்தில் இருக்கணும். இந்த ரகசியத்தை புரிஞ்சிக்கிட்டாலே எந்தத் தொழிலை செய்யவும் வயது ஒரு தடையாய் இருக்காது’ அழுத்தமாக சொல்கிறார் இந்த இளம் பிசினஸ் மேக்னெட்.
– ஷாலினி நியூட்டன்.
The post 24 வயதில் டெக்ஸ்டைல் முதலாளி… மாஸ் காட்டும் இளம் பெண்! appeared first on Dinakaran.