
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
42-வது வணிகர் தினத்தையொட்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற மாநாட்டில், பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்-அமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, 5-ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை (டி) எண்.207, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் (கே2) துறை, நாள் 08.05.2025-மூலம் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.