![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37178097-8.webp)
சென்னை,
மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் கவுதம் வாசுதேவ் மேனன். மாதவன், அப்பாஸ், ரீமா சென், விவேக் நாகேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவின் ஒரு சிறந்த படமாக அமைந்தது மின்னலே. இப்படம் பிப்ரவரி 2, 2001 அன்று வெளியானது.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ்த் திரையிசை உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தினார். படத்தில் இடம்பெற்ற ஒன்பது பாடல்களும் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றன. பின்னணி இசையும் தீம் இசைத் துணுக்குகளும்கூட ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. இதற்கு முன்பே சில படங்களில் பாடல்களை எழுதியிருப்பவரான தாமரை இந்தப் படத்தில் எழுதிய 'வசீகரா', 'இவன் யாரோ' உள்ளிட்ட பாடல்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். இந்தப் படத்துக்குப் பிறகு கவுதம் -ஹாரிஸ்-தாமரை கூட்டணி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றிக் கூட்டணிகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.
![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/02/37178383-8a.webp)
காதலைப் புதுமையான கோணத்தில் சொன்ன அதன் கதைக்களம், காதல், கல்லூரிப் பருவ சேட்டைகள் ஆகிய அனைத்தும் சரிவிகிதத்திலும் சிறப்பாகவும் அமைந்த அதன் திரைக்கதை, பாடல்கள் என்று இதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம்.
இன்றோடு கவுதம் வாசுதேவ் மேனனின் "மின்னலே" படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி இயக்குனர் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கவுதம் வாசுதேவ் மேனன், மின்சாரக் கனவு படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 2003ல் காதலும் ஆக்சனும் கலந்த காக்க காக்க படத்தை இயக்கினார். வேட்டையாடு விளையாடு, பச்சை கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, நடுநசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை அவர் இயக்கியுள்ளார். அவர் முதன்முறையாக மலையாளத்தில் இயக்கியுள்ள ‛டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படம் கடந்த 23ம் தேதி வெளியானது.