24 ஆண்டு கால கனவு நனவாகிறது: மீண்டும் புத்துயிர் பெறும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம்

3 months ago 19

* முதற்கட்டமாக 500 ஏக்கர் மேம்படுத்த திட்டம், லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த 1990ம் ஆண்டுகளில் சாதி ரீதியாக மோதல்கள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து 1996ம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தென் மாவட்டங்களில் திறமை வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு சாதி கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் தலைமையில் கமிட்டி அமைத்து தென் மாவட்டங்களில் சாதி மோதல்களுக்கு காரணம் என்ன என ஆராய கலைஞர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஆய்வு நடத்திய நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் தலைமையிலான குழு, தென் மாவட்டங்களில் சாதி கலவரங்களுக்கு வேலைவாய்பு இன்மையே காரணம். எனவே, தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் புதிய தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என அறிக்கை அளித்தது. அதன்படி படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கத்தில், உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் நாங்குநேரி உயர் தொழிற்பூங்கா திட்டம்.

இதற்காக நெல்லை – குமரி நெடுஞ்சாலையில் 2 ஆயிரத்து 519 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை கொண்டு வருவதற்காக முயற்சி மேற்கொண்ட அப்போதைய ஒன்றிய முன்னாள் அமைச்சர் மறைந்த முரசொலி மாறன், நாங்குநேரியை தடையில்லா வர்த்தகம் செய்யும் நோக்கில் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவித்தார். இதற்கு அப்போதைய முதல்வர் கலைஞர் 2001ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். நெல்லை -கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ள நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழிற்கூடங்கள், தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்டவை உருவாக்க திட்டமிடப்பட்டது.

இதன் மூலம் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பில்லாத ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டது. நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தொழில் முதலீடுகளை கொண்டு வருவதற்காக துவக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இன்பேக் (INFAC) என்ற நிறுவனத்திடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததால் நாங்குநேரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து மீண்டும் 2006ம் ஆண்டு கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட ஏஎம்ஆர்எல் என்ற நிறுவனத்துடன் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அப்போது ஒரு சில தொழிற்சாலைகள் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தொழில் தொடங்கின. இங்கு பாலி பேக் நிறுவனம் உள்ளிட்ட 31 நிறுவனங்கள் தொழில் தொடங்கின.

மேலும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பொறியியல், மருத்துவவியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு மற்றும் மென்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம் ஆகிய தொழிற்சாலைகளும் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 2011ல் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்ததால் நாங்குநேரி திட்டம் 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் தூசி தட்டப்பட்டது.

அப்போது தான் தொழில் நிறுவனங்களை கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஏஎம்ஆர்எல் நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) ஒப்பந்தத்தை மீறி நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவிற்கு சொந்தமான இடங்களை அடமானம் வைத்து கொல்கத்தாவைச் சேர்ந்த நிதி நிறுவனத்திடம் ரூ.855 கோடி கடன் பெற்றது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் தொழில் முன்னேற்றம் ஏற்படுத்துவதற்காக நிலத்தை குத்தகை பெற்ற ஏஎம்ஆர்எல் நிறுவனம் எந்தப் பணியும் நாங்குநேரியில் மேற்கொள்ளவில்லை.

மாறாக ரூ.855 கோடிக்கு தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து கடன் பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் ஏஎம்ஆர்எல் நிறுவனம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் கட்டணத்தை செலுத்தாததால், இந்த வளாகத்தில் இயங்கும் 14 யூனிட்களுக்கான குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்ட சாலைகள் எந்தவித பராமரிப்பும் இன்றி பொலிவிழந்தது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இயக்கப்படவில்லை.

இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார். நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ ரூபி மனோகரன், சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்திற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும் என சட்டமன்றத்திலும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால், ஏஎம்ஆர்எல் நிறுவனம் டிட்கோ தனியார் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் ரத்து செய்யப்பட்டது.

மேலும் நாங்குநேரியில் முதற்கட்டமாக 500 ஏக்கர் நிலத்தை ேமம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. நாங்குநேரி திட்டம் மீண்டும் உயிர் பெறுவதன் மூலம் ஏற்கனவே திட்டமிட்டபடி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*இஸ்ரோவை அடுத்து நாங்குநேரி
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் இஸ்ரோவின் திரவ எரிபொருள் திட்ட வளாகம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட் இன்ஜின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சோதனை செய்யப்படும் திரவ ராக்கெட் இன்ஜின்கள் ஸ்ரீஹரிகோட்டா கொண்டு செல்லப்பட்டு ஏவப்படுகிறது.

இனி வரும் காலங்களில் இவை குலசேகரன்பட்டினத்தில் ஏவப்படும் சூழ்நிலை உருவாகும். குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளமாக மாறுவதால் அங்கு ராக்கெட் இன்ஜின் உதிரிபாகங்கள் தொழிற்சாலை அமைக்கும் திட்டமும் தமிழ்நாடு அரசிடம் உள்ளது. குலசேகரன்பட்டினம், மகேந்திரகிரிக்கு மையமாக அமைந்துள்ள நாங்குநேரியிலும் இந்த தொழில்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளது.

* ரூ.792 கோடிக்கு ஏற்றுமதி
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனைத்து தொழில்களையும் கொண்டு வரும் நோக்கத்தில், அதற்கான பொறுப்பை ஐதராபாத்தைச் சேர்ந்த ஏஎம்ஆர்எல் என்ற நிறுவனத்திடம் டிட்கோ ஒப்படைத்தது. இங்கு 31 நிறுவனங்கள் செயல்பட்ட நிலையில் 14 நிறுவனங்களில் 700 பேர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை அங்கு ரூ.792 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 வழி போக்குவரத்துக்கு ‘நோ ப்ராப்ளம்’
நாங்குநேரியை பொறுத்தவரை நெல்லை – கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ளது. அருகில் உள்ள தூத்துக்குடி விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்து பன்னாட்டு விமான நிலையமாக தூத்துக்குடி மாறுகிறது. அருகில் உள்ள மதுரை, திருவனந்தபுரத்தில் இருந்தும் எளிதாக நாங்குநேரியை அடைய முடியும்.

இதன் மூலம் விமான போக்குவரத்து எளிதாகியுள்ளது. அருகில் உள்ள தூத்துக்குடியில் துறைமுகம் அமைந்துள்ளதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்கு பெரும் வாய்ப்பு. மதுரை, கன்னியாகுமரி போன்ற அண்டை மாவட்டங்களிலும் எளிதாக குறுகிய நேரத்தில் வந்தடையும் வகையில் நான்கு வழிச் சாலையில் நாங்குநேரி அமைந்துள்ளது. இதன் மூலம் 3 வழி போக்குவரத்துக்கும் உகந்த நகரமாக நாங்குநேரி திகழ்கிறது.

தென் மாவட்டங்களில் பெருகும் தொழில் வளம்
நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் டயர் தொழிற்சாலை, டாடா சோலார் பேனர் உற்பத்தி ஆலை என தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேபோகிறது. மேலும் தூத்துக்குடி சிப்காட்டிலும் பர்னிச்சர் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. தூத்துக்குடியில் பாக்ஸ்கான் எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. நாங்குநேரி திட்டமும் உயிர் பெறும் போது தென் மாவட்டங்களில் தொழில் வளம் பெருகும்.

The post 24 ஆண்டு கால கனவு நனவாகிறது: மீண்டும் புத்துயிர் பெறும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் appeared first on Dinakaran.

Read Entire Article