
சென்னை,
விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். அதன்பின்னர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்திற்காக டி.இமான் தேசிய விருது பெற்றார். கிரி, மைனா, கும்கி, கயல், பாண்டியநாடு, ஜீவா, ஜில்லா, விஸ்வாஸம், மனம்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை, மருது, வெள்ளக்கார துரை, அண்ணாத்த எனப் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார், டி.இமான்.

இசையமைப்பாளர் இமான், இப்போது சமூக சேவகராகவும் நற்பணிகள் பலவற்றை செய்து வருகிறார். இமான் பிறந்த நாளையொட்டி அவர் தன் உடலை சென்னை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளார். இதனை அவர் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்.

தனது 23 ஆண்டு கால இசைபயணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ""23 வருடங்களுக்கு முன்பு, விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் இசை உலகில் கால் பதித்தேன். அது என் வாழ்க்கையை எவ்வளவு மாற்றும் என்று அப்போது தெரியவில்லை. இன்று நான் நன்றியுடன் திரும்பிப் பார்க்கிறேன்.என் ரசிகர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு.. உங்கள் அன்புதான் எனது மிகப்பெரிய பலம். இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.