203 கிராம் நகை, ரூ.31.50 லட்சம் பறித்த வழக்கு நகை வியாபாரியை காரில் கடத்திய 6 சிவகங்கை கொள்ளையர்கள் கைது: புகார் அளித்த 24 மணி நேரத்தில் சிக்கியது பற்றி பரபரப்பு தகவல்கள்

7 hours ago 3

சென்னை: நகை வியாபாரியை காரில் கடத்தி நகை மற்றும் 31.50 லட்சம் பணம் பறித்த வழக்கில், சிவகங்கை கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சோமு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (64), நகை வியாபாரி. இவர், காரைக்குடியில் நகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது நகைக்கடைக்கு தேவையாக நகைகளை வாங்க சென்னைக்கு கடந்த மாதம் 26ம் தேதி வந்தார். அன்று இரவே சொந்த ஊர் செல்ல புதிய நகைகள் மற்றும் ரொக்கத்துடன் எழும்பூர் இருதய ஆண்டவர் தேவாலயம் முன்பு ஆம்னி பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல், ரவிச்சந்திரனை கத்திமுனையில் மிரட்டி காரில் ஏற்றி சென்று, ரூ.31.39 லட்சம் ரொக்கம், 131 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ 250 கிராம் வெள்ளி நகைகளை பறித்து கொண்டு, போரூர் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு தப்பினர்.இதுகுறித்து, அச்சம் அடைந்த நகை வியாபாரி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். பிறகு குடும்பத்தினர் அறிவுரைப்படி கடந்த 29ம் தேதி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

எழும்பூர் உதவி கமிஷனர் ஜெகதீசன் உத்தரவுப்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், நகை வியாபாரி கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது காரில் உள்ள பதிவு எண் போலி என தெரிந்தது. இதனால் விசாரணையில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. இருந்தாலும் உதவி கமிஷனர் ஜெகதீசன் தலைமயிலான குழுவினர் எழும்பூர் பகுதியில் இருந்து நகை வியாபாரியை இறக்கிவிட்ட போரூர் பகுதி வரையிலான 30க்கும் மேற்பட்ட பிரதான சிக்னல்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் போரூரில் வேறு பதிவு எண் கொண்டு மீண்டும் பல்லாவரம் நோக்கி சென்றது தெரியவந்தது.பின்னர் பல்லாவரத்தில் அந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, பல்லாவரம் பகுதியில் கார்களை வாடகைக்கு விடும் டிராவல்ஸ் நிறுவனத்தில் கொள்ளை கும்பல் காரை வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.

அதன்பிறகு காரை வாடகைக்கு எடுத்த போது பிரபு (42) என்பவர் தனது செல்போன் எண்ணை டிராவல்ஸ் நிறுவனத்தில் கொடுத்திருந்தார். அந்த எண்ணை வைத்து செல்போன் டவர் லொக்கேஷன் பார்த்த போது, சிவகங்கை காளையார் கோயில் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது. உடனே சிவகங்கை சென்ற போலீசார் பிரபுவை பிடித்து விசாரணை நடத்திய போது, பிரபு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த ஒரு மாதங்களாக நகை வியாபாரியை பின் தொடர்ந்து வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதற்காக கடந்த வாரம் பிரபு தனது நண்பர்களுடன் நகை வியாபாரியை பின் தொடர்ந்துள்ளார்.

அப்போது நகை வியாபாரி வாரத்திற்கு 3 நாட்கள் சென்னைக்கு பல லட்சம் பணத்துடன் வந்து நகைகளை வாங்கி செல்வதை உறுதி செய்தனர். அதன் பிறகு கடந்த 26ம் தேதி திட்டமிட்டப்படி சென்னைவந்து பல்லாவரத்தில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் காரை வாடகைக்கு எடுத்து காரில் போலி பதிவு எண்ணை மாட்டி நகை வியாபாரியை கடத்தி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. உடனே போலீசார் பிரபுவை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி சிவகங்கை பகுதியை சேர்ந்த முத்து ராமலிங்கம் (45), தீனா என்ற தினகரன் (36), பிரேம்குமார் (38), மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த முத்துலிங்கம் (42) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 203 கிராம் தங்கம், 3.2 கிலோ வெள்ளி கட்டிகள், ரூ.6.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கூண்டோடு போலீசார் கைது செய்ததை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

The post 203 கிராம் நகை, ரூ.31.50 லட்சம் பறித்த வழக்கு நகை வியாபாரியை காரில் கடத்திய 6 சிவகங்கை கொள்ளையர்கள் கைது: புகார் அளித்த 24 மணி நேரத்தில் சிக்கியது பற்றி பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Read Entire Article