2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க அரசு இலக்கு

11 hours ago 1

புதுடெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், துருக்கி, சீன தயாரிப்புகளை பாகிஸ்தான் பயன்படுத்தியபோதும், அவற்றை இந்தியா முறியடித்து வெற்றி பெற்றது. இதில், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தொடர்புடைய பொருட்களை இந்தியா பயன்படுத்தி இருந்தது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது, ராணுவ நடவடிக்கைகளில், தொழில்நுட்பத்தில் சுயசார்புடன் செயல்படுவதற்கான இந்தியாவின் முன்னோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியை 2029-ம் ஆண்டுக்குள் பெரும் அளவில் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 2024-25 நிதியாண்டில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பில், பாதுகாப்பு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி உள்ளது. இந்நிலையில், 2029-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு பொருட்களின் ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

2047-ம் ஆண்டுக்குள் பாதுகாப்பு சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் உலகின் மிக பெரிய நாடாக இந்தியாவை வளர்ச்சியடைய செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பிரிவில் வளர்ச்சியை தொடர்ந்து அதிகரிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேக் இன் இந்தியா திட்டம் மற்றும் சுயசார்பு ஆகியவற்றுக்கான வலுவான செயல்பாடுகளால், மிக பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தி மையம் என்ற வகையில் இந்தியா உருவெடுத்து வருகிறது. 2023-24 நிதியாண்டில், ரூ.1.27 லட்சம் கோடி என்ற அளவில் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி இருந்தது. அதேவேளையில், 2024-25 நிதியாண்டில், ஏற்றுமதி ரூ.23,622 கோடியாக அதிகரித்தது. இது, 2013-14 நிதியாண்டில், ரூ.686 கோடி என்ற அளவில் இருந்து 34 மடங்கு அதிகரித்து உள்ளது கவனிக்கத்தக்கது.

Read Entire Article