2026-ல் திமுக ஆட்சியை விஜய் அகற்றுவார்: தவெக பதிலடி

1 week ago 4

சென்னை,

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27-ந் தேதி நடத்தினார்.இந்த மாநாட்டில் விஜய், அரசியல் எதிரி என்று தி.மு.க.வை மறைமுகமாக விமர்சித்தார். விஜயின் இந்த பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர் மட்டும் பதிலடி கொடுத்தார்கள். விஜய், பா.ஜனதாவின் 'சி' டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

சென்னையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில், 'எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்' என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் விஜய் குறித்து மறைமுகமாக விமர்சித்தார். ஸ்டாலின் கூறுகையில், புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் பதில் அளித்து நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை என்று கூறினார்.

முதல் அமைச்சர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து இருக்கும் தவெக கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஷ்வரன் கூறியிருப்பதாவது:-முதல் அமைச்சர் ஸ்டாலின் எங்கள் தலைவரைத் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருக்கிறார். இது துரதிஷ்டவசமானது. அரசியல் எதிரிகளுக்கு இதுபோல பதில் கொடுப்பது சரியான போக்கு இல்லை. தமிழ்நாட்டில் தங்கள் குடும்ப ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் எதிரிகளைத் தரக்குறைவாகப் பேசுவது திமுகவின் மரபணுவிலே இருக்கிறது. முதல் அமைச்சரின் பேச்சும் அதைத்தான் காட்டுகிறது. 1970-களில் ஆண்டு இந்த குடும்ப ஆட்சிக்கு எதிராகவே எம்ஜிஆர் கலகம் செய்தார். இந்த குடும்ப ஆட்சியை அகற்றியும் காட்டினார். வரும் 2026-ல் இந்த வரலாறு மீண்டும் திரும்பும். 2026-ல் இந்த குடும்ப ஆட்சியைத் துடைத்தெறிந்துவிட்டு, ஜனநாயக ஆட்சியை விஜய் அமைப்பார்" என்றார்.

Read Entire Article