திருநெல்வேலி: வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை நாலுகால் பாய்ச்சலில் திமுக மேற்கொண்டுள்ளது. கட்சி ரீதியில் அமைப்புகளை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியாக மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டச் செயலர்களை நியமிப்பது, வாக்குச்சாவடி முகவர்களை அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் நேரடியாக சந்தித்து பணிகளை துரிதப்படுத்துவது என, திமுக சுறுசுறுப்பாக களமாடிக் கொண்டிருக்கிறது.
2 சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிப்பது என்ற திட்டத்தில், திருநெல்வேலி, தென்காசி, தேனி, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்டங்களில், 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் வீதம் ஏற்கெனவே நியமிக்கப்பட்டு உள்ளனர். அடுத்ததாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 27 மாவட்டங்கள் கட்சி ரீதியாக பிரிக்கப்படவுள்ளன.