பொதுப்பலன்கள்
மீன ராசியினருக்கு பொருளாதார நிலை உயரும் ஆண்டு இது. ஜென்ம ராகு, 3-ம் இடத்தில் ராசி அதிபதி குரு, சப்தம ஸ்தானம் என்ற 7-ம் இடத்தில் கேது, விரைய (12-ல்) ஸ்தானத்தில் சனி என்ற நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. மார்ச் மாதத்தில் சனி ஜென்ம ராசியிலும், ஜூன் மாதத்தில் குரு 4-ம் இடத்திலும், ராகு 12-ம் இடத்திலும், கேது 6-ம் இடத்திலும் பெயர்ச்சி அடைகிறார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள்.
உறவினர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் பல மடங்கு உயரும். வங்கிக் கடன்கள் கிடைக்கும். வம்பு வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் அனைவரும் உங்களை மதிப்பார்கள். பெண்மணிகளுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டு. அவர்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு கற்றுக்கொள்வார்கள்.
குடும்பம், பொருளாதாரம்
குடும்ப உறுப்பினர்களிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை பாதிக்கப்படாது. கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்ற உறவினர்கள் திரும்பவும் வந்து சேர்வார்கள். சொந்த பந்தங்களுக்கு அவர்களுடைய சிரமமான காலகட்டங்களில் பொருளாதார உதவி செய்வீர்கள். குடும்ப ரீதியான கடன்கள் தீரும். செலவுகள் கட்டுக்குள் வரும். புதிய வீடு மனை வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் சரியாக திட்டமிட்டு அவற்றை செயல்படுத்தலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். வங்கிக் கடன் பெற விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடன் தொகை கைவந்து சேரும்.
தொழில், உத்தியோகம்
தொழில்துறையினருக்கு போட்டிகள் அதிகமாக இருந்தாலும் வாடிக்கையாளர்கள் ஆதரவு மூலம் தொழில் விருத்தி ஏற்படும். தொழிலாளர்களை மட்டும் நம்பி இராமல் நீங்களும் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தொழிலை விருத்தி செய்ய திட்டமிடுவீர்கள். புதிய கொள்முதல்களை செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நல்ல மதிப்பு பெறுவார்கள். பலருக்கும் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். நிர்வாகத்தின் ஆதரவோடு உத்தியோகஸ்தர்கள் கடமையை சிறப்பாக செய்வார்கள். ஆசிரியர்களுக்கு பணி உயர்வும், சம்பள உயர்வும் உண்டு.
கலை, கல்வி
கலைஞர்களுக்கு அவர்களே எதிர்பார்க்காத புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டிகளில் இருந்தாலும் உங்களுடைய திறமைக்கு ஏற்ற வாய்ப்புகளும் அதற்கு உரிய சன்மானமும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். சிரமப்படும் சக கலைஞர்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை கிடைக்கும். கல்வி சார்ந்த உயர்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகளை பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதை குறைத்துக் கொண்டு கல்வியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கூடுதல் நன்மை பெற..
பழமையான திருக்கோவில்களுக்கு இயன்றவரை மராமத்து பணிகளை செய்து தருவது, அதற்கு பூஜைக்குரிய பொருட்கள், நெய் சமர்ப்பிப்பது நல்லது. அத்துடன் வசதியற்ற பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, எழுதுபொருள்கள் தானமாக அளிப்பதன் மூலமும் நன்மைகள் வந்து சேரும்.
கணித்தவர்: சிவகிரி ஜானகிராம்