
துபாய்,
8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் துபாய் சர்வதேச மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா திடீரென அந்த மைதானத்துக்கு சென்றார்.
அவரை பார்த்ததும் இந்திய வீரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் அனைவரையும் பும்ரா சந்தித்து பேசினார். முன்னதாக, பும்ரா 2024ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், 2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்ற விரர், 2024ம் ஆண்டின் சிறந்த டி20 அணியில் இடம்பெற்ற வீரர் என ஐ.சி.சி அறிவித்த 4 விருதுகளையும் இந்த மைதானத்தில் வைத்து பெற்றுக் கொண்டார்.
இந்த விருதுகளுடன் அவர் துபாய் மைதானத்தில் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காயம் காரணமாக பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.