
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னையை அணி 25 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி காண பேட்டிங்கின் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடாததே முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் தோனி மற்றும் விஜய் சங்கர் இருவரும் மெதுவாக விளையாடியதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். விமர்சகர்கள் தோனி தான் தோல்விக்கு காரணம் என்று விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், 2023ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருடன் தோனி ஓய்வு பெற்றிருக்க வேண்டும் எனவும், தற்போது சென்னை அணி நிர்வாகம் கடினமான முடிவை எடுக்க வேண்டும் எனவும் மனோஜ் திவாரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இங்கே நான் கடினமாக பேசினால் என்னை மன்னித்து விடுங்கள். தோனி 2023 ஐ.பி.எல் முடிந்தவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அதுவே அவருக்கான சிறந்த நேரம்.
இவ்வளவு வருடங்களாக விளையாடி மரியாதையை சம்பாதித்துள்ள அவர் கடந்த 2 வருடங்களாக இப்படி தோற்பதை ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. சென்னை ரசிகர்கள் சாலைகளில் வந்து பேட்டி கொடுத்து எவ்வாறு ரியாக்சன் கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். தோனி முயற்சிகளை எடுக்கிறார். அவரால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்று ஸ்டீபன் பிளம்மிங் கூறுகிறார்.
ஆனால், 20 ஓவர்கள் கீப்பராக உட்கார்ந்து எழுந்து, டைவ் அடித்து, கேட்ச் பிடித்து, ரன் அவுட் செய்து அணிக்கு உதவி செய்யும் தோனி கொஞ்சம் முன்னதாகவே வந்து 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாதா?. சென்னை அணியில் அனைத்து முடிவுகளும் தோனியை சுற்றியே எடுக்கப்படுகிறது.
ஆனால், எதுவும் அவர்களுக்கு வேலை செய்யவில்லை. எனவே, எந்த முயற்சிகளும் வேலை செய்யவில்லை என்பதால் சென்னை நிர்வாகம் தோனி குறித்த கடினமான முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.