2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள் அதிகரிப்பு: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மெட்டல் டிடெக்டர்

3 hours ago 2

சென்னை: 2021ம் ஆண்டுக்கு பின் அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் வெளிநோயாளிகள் சேவை பெறுவதாகவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மெட்டல் டிடெக்டர் அமைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வர்களுடன் காணொலி வாயிலாக மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நேற்று முன்தினம் காலை நடந்த அசம்பாவித சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமுடன் உள்ளார். இன்று (நேற்று) காலை அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவர் பாலாஜியை நேற்று மாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் மீது காவல்துறையினர் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 2008ம் ஆண்டு தமிழ்நாடு மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் மருத்துவ சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது வன்முறையினையும், சொத்து சேதத்தையும் அல்லது இழப்பினையும் ஏற்படுத்துவதை தடுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு 48/2008 கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக முக்கியமான பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், நேற்று முன்தினம் 11 அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளடக்கியிருக்கும் சங்கங்களுடனான கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. கூட்டத்தில் நானும், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் இத்துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2021க்கு முன்னர் 6500 பேர் புறநோயாளிகளின் எண்ணிக்கை இருந்தது என்பது தற்போது 12,000 ஆக உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2021க்கு முன்னர் 3000 பேர் வந்திருந்தனர், தற்போது 4500 பேர் புறநோயாளிகளாக வருகின்றனர். தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற நிலையே உள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள்ளாகவே புறநோயாளிகள் சேவை முடிக்க வேண்டும். எனவே இதுபோன்ற இடங்களில் மெட்டல் டிடெக்டர் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய ஒரு சில இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது, தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேற்குவங்க சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை…
ஏற்கனவே மேற்குவங்க மாநிலத்தில் நடந்த மருத்துவர்கள் மீதான சம்பவங்களை ஒட்டி, தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளுக்கு புதிய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, தலைமைச் செயலாளர் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி உயர் அலுவலர்களுடனான கூட்டம் நடத்தி மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்து உத்தரவிட்டுள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதனுடைய காட்சிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையம் மற்றும் காவல் ரோந்து பணிகள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

The post 2021ம் ஆண்டுக்கு பின் வெளிநோயாளிகள் அதிகரிப்பு: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மெட்டல் டிடெக்டர் appeared first on Dinakaran.

Read Entire Article