சென்னை,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கடந்த 2021-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்ரவர்த்தி தொடக்கத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தார்.
கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவிய அவரை புதிய பயிற்சியாளர் கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் அசத்தி வரும் வருண் தற்போது இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் 2021-ம் ஆண்டு அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட பின் தமது பவுலிங்கை அலசி ஆராய்ந்து கம்பேக் கொடுத்ததாக வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "95 சதவீதம் கவனம் என் மீது இருக்கிறது. ஏனெனில் கவனத்தை என்னிடமிருந்து விலக்கி பேட்ஸ்மேன்களிடம் காட்டினால் என்னுடைய செயல்முறைகளை நான் இழந்து புல்டாஸ் அல்லது ஷார்ட் பந்துகளை வீசக்கூடும். எனவே பவர் பிளே அல்லது டெத் ஓவர்கள் உட்பட அனைத்து நேரங்களிலும் என்னுடைய செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். பேட்ஸ்மேன் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி நான் அதிகம் சிந்திப்பதில்லை.
ஆனால் அதுவும் என்னுடைய மனதில் பின்புறத்தில் ஓடும். எனது வேகத்தை மாற்றுவதற்கு முயற்சிப்பதில் வேலை செய்தேன். 2021-ம் ஆண்டில் நான் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்னுடைய பவுலிங்கை அலசி ஆராய்ந்தேன். அப்போது நான் அதிகமாக சைடு ஸ்பின் வீசுவதை உணர்ந்தேன். அதனாலேயே பேட்ஸ்மேன்களை என்னால் வீழ்த்த முடியவில்லை என்பதை கண்டறிந்தேன்.
அத்துடன் அவர்களை பவுன்ஸ் வைத்துதான் வீழ்த்த முடியும் என்பதையும் கண்டறிந்தேன். எனவே அதை செய்வதற்காக ஓவர் ஸ்பின் டெக்னிக்கில் வேலை செய்தேன். அது தற்போது எனக்கு வேலை செய்கிறது. ஒருவேளை பந்து அதிகமாக பவுன்ஸ் ஆனால் அது அதிகமாக சுழல்வதற்கும் வாய்ப்புள்ளது" என்று கூறினார்.