2019ல் ஒன்றிய பாஜக அரசு நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’-க்கு ஆதாரங்கள் வேண்டும்: காங். மாஜி முதல்வரின் கருத்தால் சலசலப்பு

12 hours ago 3

புதுடெல்லி: 2019ல் ஒன்றிய பாஜக அரசு நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’-க்கு ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்ட காங்கிரஸ் மாஜி முதல்வர், பெரும் சலசலப்பு ஏற்பட்டதால் பல்டி அடித்தார். காங்கிரஸ் கட்சியில் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்தது. பின்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பஞ்சாப் முதலமைச்சருமான சரண்ஜித் சிங் சன்னி அளித்த பேட்டியில்,‘கடந்த 2019 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும்.? அந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? பாகிஸ்தான் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் சர்ஜிக்கில் ஸ்டிரைக், அந்நாட்டின் எந்த பகுதியில் நடந்தது? இது எதுவும் எனக்கு தெரியவில்லை.

நம் நாட்டில் யாராவது குண்டு வீசினால் நம் நாட்டு மக்களுக்கு தெரியாதா? அவர்கள் (ஒன்றிய பாஜக அரசு) பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாகக் கூறுகிறார்கள்; ஆனால் எதுவும் நடக்கவில்லை. எங்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக தெரியவில்லை. இதுகுறித்த ஆதாரத்தை ஆரம்பத்தில் இருந்தே நான் கேட்டு வருகிறேன்’ என்றார். இந்திய விமானப்படைக்கு எதிராக சரண்ஜித் சிங் சன்னி எழுப்பியுள்ள கேள்வி, அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து டெல்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா கூறுகையில், ‘சன்னியின் கருத்து காங்கிரஸ் கட்சியின் கீழ்த்தரமான மனநிலையையும், அக்கட்சித் தலைவர்களின் அழுக்கு அரசியலையும் பிரதிபலிக்கிறது. இந்திய விமானப்படை மீது காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பாகிஸ்தான் கூட இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் பெரும் சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியானது ‘பாகிஸ்தான் ப்ரஸ்த் பார்ட்டி’ ஆக செயல்படுகிறது. ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஆதரிக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினார். சன்னியின் கருத்து பெரும் விவாதத்தை தூண்டியதால், நேற்றிரவு அவர் தனது கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் மீண்டும் அளித்த பேட்டியில், ‘நான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு ஆதாரம் கேட்கவில்லை. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில், ஒன்றிய அரசுடன் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக எந்த நடவடிக்கையை எடுத்தாலும் பாறைபோல் காங்கிரஸ் ஆதரவாக இருக்கும்’ என்று பல்டி அடித்தார்.

The post 2019ல் ஒன்றிய பாஜக அரசு நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’-க்கு ஆதாரங்கள் வேண்டும்: காங். மாஜி முதல்வரின் கருத்தால் சலசலப்பு appeared first on Dinakaran.

Read Entire Article