2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாஜ வெளியிட்ட மோசமான விளம்பரம்: நினைவுகூர்ந்து காங். விமர்சனம்

4 hours ago 1

புதுடெல்லி: 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாஜ வெளியிட்ட மோசமான விளம்பரத்தையும், அப்போதைய முதல்வர் மோடியின் பேச்சையும் நினைவுகூர்ந்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜம்முவின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் மற்றும் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘ஏப்ரல் 22ம் தேதி இரவு இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கேட்டு இருந்தது.

அந்த கூட்டம் இரண்டு நாட்களுக்கு பிறகு நடைபெற்றது. ஆனால் இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை. ஏப்ரல் 24ம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவின் தீர்மானம் தெளிவாக உள்ளது. காங்கிரஸ் மற்றும பிற எதிர்க்கட்சிகள், தாக்குதல் குறித்து விவாதிக்கவும், கூட்டுத்தீர்மானத்தை வெளிப்படுத்தவும் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆனால் மும்பையில் பயங்கர தீவிரவாத தாக்குதல்கள் நடந்த இரண்டு நாட்களுக்கு பின், 2008ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பாஜ என்ன செய்தது? எப்போதும் இல்லாத வகையில் அப்போதைய குஜராத் முதல்வர் மும்பைக்கு சென்று பிரமாண்டமான முறையில் ஊடகங்களுக்கு உரையாற்றினார். அன்றைய தினமே செய்திதாள்களில் ஒரு மோசமான விளம்பரத்தையும் பாஜ வெளியிட்டது. இது வரலாறு. அதில், கொடூரமான தீவிரவாதம். விருப்பப்படி தாக்குகின்றது. பலவீனமான, விருப்பமற்ற மற்றும் திறமையற்ற அரசாங்கம் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின் பாஜ வெளியிட்ட மோசமான விளம்பரம்: நினைவுகூர்ந்து காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article