முசிறி , மே 14: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் முசிறி லோகநாதன், துறையூர் மோகன், சேக்கிழார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் விவசாய சங்க தலைவர் அயிலை சிவ.சூரியன் மற்றும் விவசாயிகள் பலரும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அப்போது காவிரியில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்ட நிலையில் கிடப்பில் உள்ளது. அப்பகுதியில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும். மரபணு திருத்தப்பட்ட விதைகள் விற்பதை தடை செய்ய வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முசிறியில் காவிரி ஆற்றின் அருகில் அமைப்பதை தடை செய்ய வேண்டும். இதற்குத் தேவையான இடத்தை விட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையிலான கூடுதலான இடத்தை நாங்கள் (விவசாயிகள்) வழங்குகிறோம். இதன் கழிவுகளை எங்கு விடுவார்கள். இவை மீண்டும் காவிரி ஆற்றிலே விடப்படும். இதனை தடை செய்ய வேண்டும்.
முசிறியில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சுமார் 20 ஆயிரம் தென்னை மரங்கள், 10 ஆயிரம் பனை மரங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போன நிலையில் உள்ளது. எனவே காவிரி ஆற்றில் தடுப்பணை என்பது மிக அவசியமானது ஒன்றாகும். காட்டுப்பன்றி, மான், மயில் ஆகியவற்றிடம் இருந்து விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பிலியபுரத்தில் வெங்காயம் பதப்படுத்தும் மையங்கள் பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படாமல் உள்ளது. இதை மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பபடும் எனவும் தெரிவித்தார்.
The post 20 ஆயிரம் தென்னை, 10 ஆயிரம் பனை மரம் காய்கிறது: முசிறி, தொட்டியம் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.