2-வதும் பெண்குழந்தை பிறந்ததால் கொன்று உடலை கிணற்றில் வீசிய பெற்றோர்

2 weeks ago 4

மும்பை,

மராட்டிய மாநிலம், ஜல்னா மாவட்டம் அசர்கேடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 12-ந்தேதி பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனையில் அந்த குழந்தை கொன்று கிணற்றில் வீசப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை யாருடையது என்று கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

இதற்காக அந்தப்பகுதியில் குழந்தை பிறப்பு பதிவுகளை பராமரிக்கும் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் உதவியை போலீசார் நாடினர். அவர்கள் அளித்த தகலின்படி அப்பகுதியில் உள்ள 60 கிராமங்களில் புதிதாக பிறந்த 1,000 குழந்தைகளின் வீடுகளை போலீசார் சோதனை செய்தனர்.

இந்த சோதனையின்போது வக்ரி வாட்காவ் தண்டா கிராமத்தில் சதீர்பவார்-பூஜா பவார் தம்பதியின் பெண் குழந்தை சமீபத்தில் காணாமல் போனதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.

இதில், கல்நெஞ்சம் படைத்த அந்த தம்பதி தாங்கள் பெற்ற குழந்தையை கொன்று கிணற்றில் வீசியது வெளிச்சத்துக்கு வந்தது. ஏற்கனவே தங்களுக்கு ஒரு மகள் இருப்பதால், மற்றொரு பெண் குழந்தையை வளர்க்க விருப்பமின்றி இந்த படுபாதக செயலை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதன்பேரில் போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article