புனே,
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து 259 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 45.3 ஓவர்களில் 156 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக டாம் லதாம் 86 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் சுந்தர் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய 2-வது இன்னிங்சில் வெறும் 245 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சாண்ட்னெர் 6 விக்கெட்டுகளை அள்ளினார். இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 77 ரன்கள் அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆரம்பத்திலேயே நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த தோல்விக்காக எந்த வீரரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று தெரிவிக்கும் ரோகித் சர்மா அணியாக தோல்வியை சந்தித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தோல்விக்கான காரணம் குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது ஏமாற்றம். நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை. எங்களை விட சிறப்பாக விளையாடிய நியூசிலாந்துக்கு பாராட்டுக்கள். அவர்களுடைய சவால்களுக்கு நாங்கள் பதிலளிக்க தவறியதாலேயே தோல்வியின் பக்கம் உள்ளோம். நாங்கள் போதுமான ரன்கள் எடுத்ததாக நினைக்கவில்லை. வெற்றிக்கு 20 விக்கெட்டுகள் எடுப்பது அவசியம். ஆனால் அதற்கு பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதும் முக்கியம். அவர்கள் 200-3 என்ற நிலையில் இருந்தபோது மீண்டு வந்த நாங்கள் 259 ரன்களுக்குள் சுருட்டியது நல்ல செயல்பாடு.
பிட்ச்சில் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை அவ்வளவுதான். முதல் இன்னிங்சில் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி விஷயங்கள் வேறு மாதிரி இருந்திருக்கும். தற்போதைய நிலையில் நாங்கள் மும்பையில் நடைபெறும் அடுத்த போட்டியை வெல்ல விரும்புகிறோம். இங்கே அணியாக தோல்வியை சந்தித்தோம். அதற்காக பேட்ஸ்மேன்கள் அல்லது பவுலர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. மும்பையில் இன்னும் சிறந்த திட்டத்துடன் வருவோம்" என்று கூறினார்.