2-ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு நன்றி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 months ago 12

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மற்றும் மின்சாரத் துறை மந்திரி மனோகர் லால் ஆகியோர் தலைமையில் இன்று சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கலைஞர் ஆட்சி காலத்தில் 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் - மத்திய அரசும் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை துவக்கினோம். 22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமருக்கும் - மத்திய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டாவது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article