வதோதரா: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டரான தீப்தி சர்மா பந்துவீச்சில் உலக சாதனை படைத்து அசத்தி உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா 31 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் மகளிர் ஒருநாள் போட்டிகளில் 2 முறை 6 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்து இருக்கிறார். மேலும், உலக அளவில் இந்த சாதனையை செய்த 2வது பந்து வீச்சாளராகவும் சாதித்து இருக்கிறார். தென்ஆப்பிரிக்காவின் சேன் லூயிஸ் இதற்கு முன் ஒருநாள் போட்டிகளில் 2 முறை 6 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
அந்த சாதனையை தீப்திசர்மா சமன் செய்து உள்ளார். இந்திய அளவில் ஒரே போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்திய 3வது பந்துவீச்சாளராகவும் தீப்தி சர்மா இருக்கிறார். இதற்கு முன் ஜூலன் கோஸ்சுவாமி மற்றும் மமதா மாபென் ஆகியோர் தலா ஒரு முறை 6 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். அவர்களது சாதனையை முந்தி உள்ள தீப்தி சர்மா 2 முறை அதை செய்து இருக்கிறார். இந்த போட்டியில் பவுலிங்கில் கலக்கிய தீப்தி சர்மா பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு கை கொடுத்தார். அதாவது 48 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 38.5 ஓவர்களில் 162 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தீப்தி சர்மா 6 விக்கெட், ரேணுகா சிங் 4 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்திய மகளிர் அணி 55 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. அதன் பின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்களையும், ஜெமிமா ரோட்ரிகஸ் 29 ரன்களையும் எடுத்தனர். 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா (39 ரன்), ரிச்சா கோஷ் (23ரன்) அபாரமாக ஆடி ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 29 வது ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
The post 2 முறை 6 விக்கெட்: உலக சாதனை படைத்து தீப்தி சர்மா அசத்தல் appeared first on Dinakaran.