2 துறைகளிடைய நிர்வாக பிரச்னை காரணமாக கிடப்பில் சாலை சீரமைப்பு பணிகள்: திருவொற்றியூர் மக்கள் தவிப்பு

3 weeks ago 6

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் மணலி காமராஜர் சாலை, பர்மா நகர்- சடையங்குப்பம் சாலை, ஆண்டார்குப்பம் – செங்குன்றம் சாலை, டி.பி.பி.சாலை, மாதவரம் – செங்குன்றம் ஜிஎன்டி சாலை உள்பட சுமார் 50 கிலோ மீட்டர் நீள சாலைகள், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலைகளை மாநகர பேருந்துகள், கன்டெய்னர் லாரிகள் போன்ற கனரக வாகனங்களும், கார், பைக் போன்ற இலகு வாகனங்களும் பல்லாயிரக்கணக்கில் பயன்படுத்துகின்றன. தற்போது, இந்த சாலைகள் பெரும்பாலும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

சாலை பழுதால், அவ்வப்போது வாகனங்கள் பழுதாகி நடுரோட்டில் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மணலி காமராஜ் சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணி தொடங்கப்பட்டது. இதனால், அந்த சாலையில் மாநகர பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது குடிநீர் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு சாலை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இங்கு புதிய சாலை அதமக்கும் பணி கிடப்பில் உள்ளது.

ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பதால் இந்த வழியாக கார், ஆம்புலன்ஸ் ஆட்டோ போன்ற வாகனங்கள் சென்றுவர முடியாமல் திண்டாடுவதோடு பைக்கில் செல்வோர், நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் காமராஜ் சாலை வழியாக கடந்த 6 மாதங்களாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படாததால் பிராட்வேயில் இருந்து வரக்கூடிய மாநகர பேருந்துகள் மணலி மண்டல அலுவலகம் எதிரிலும், பெரம்பூரில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியிலும் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இந்த பேருந்துகளில் பயணிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதில் நெடுஞ்சாலை துறை கவனம் செலுத்தாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்னையை சரி செய்ய மணலி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சென்னை நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post 2 துறைகளிடைய நிர்வாக பிரச்னை காரணமாக கிடப்பில் சாலை சீரமைப்பு பணிகள்: திருவொற்றியூர் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article