2 கள்ளக்காதலிகளுடன் சேர்ந்து மனைவியை மயக்க ஊசி போட்டு கொன்ற கொடூர கணவர்

2 months ago 12

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் வசித்து வருபவர் பிரதியும்னா குமார் தாஸ். இவருடைய மனைவி சுபஸ்ரீ. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மனைவியை புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைக்கு கணவர் கொண்டு சென்றுள்ளார். அவர் மருத்துவர்களிடம், மனைவி சுபஸ்ரீ தற்கொலைக்கு முயன்று உள்ளார் என கூறியுள்ளார்.

எனினும், அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர் மரணம் அடைந்து விட்டார் என தெரிவித்து விட்டனர். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசாரிடமும், மனைவி தற்கொலைக்கு முயன்றார் என பிரதியும்னா குமார் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அந்த பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. சுபஸ்ரீயின் கைகள், கழுத்து பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு இருந்தன. அவருக்கு அதிக அளவு அனஸ்தீசியா (மயக்க மருந்து) கொடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதனாலேயே அவர் உயிரிழந்து உள்ளார் என அந்த அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து பிரதியும்னா குமாரிடம் போலீசார் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவருக்கு வேறு 2 பெண்களுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுபற்றி மனைவிக்கு தெரிய வந்ததும் அதுபற்றி கணவரிடம் கேட்டு அவர் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, கடந்த 8 மாதங்களாக, பெற்றோரின் வீட்டில் சுபஸ்ரீ வசித்து வந்துள்ளார். இந்த சூழலில், மனைவியை தொடர்பு கொண்டு பேசிய கணவர் பிரதியும்னா குமார் தாஸ் அவரிடம் சமரசம் பேசியுள்ளார். இதன்பின்பு, தன்னுடைய கள்ளக்காதலிகளின் ஒருவரின் வீட்டுக்கு வரும்படி கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் நண்பரின் உதவியுடன் அனஸ்தீசியா ஊசியை வாங்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில், கள்ளக்காதலி ரோசியின் வீட்டுக்கு சுபஸ்ரீ வந்ததும், அவர்கள் அனைவரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி 2 அனஸ்தீசியா ஊசிகளை சுபஸ்ரீக்கு போட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக அவர் மரணம் அடைந்து விட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Read Entire Article