சேலம்: அடுத்த 15 நாட்களில் 2,553 மருத்துவ காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புற்றுநோயினை மிகத்துல்லியமாக கண்டறியும் கருவி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரையில் மட்டுமே இருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு புதிதாக சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில், இக்கருவிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே திருச்சி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக, ரத்த கொடையாளர்கள் அதிகளவில் சேலம் மாவட்டத்தில் உள்ளதால், இதற்கென தனி கட்டிடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் 10 அல்லது 15 நாட்களில் 2,553 மருத்துவக் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான தேர்வுகள் முடிவுற்று விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
The post 2,553 மருத்துவ காலி பணியிடம் 15 நாட்களில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.