1954 முதல் 2025 வரை.... கும்பமேளாவை உலுக்கிய கூட்ட நெரிசல்கள்

1 week ago 6

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமாகக் கருதப்படும் கும்பமேளாவில், கடந்த காலங்களிலும் பல கூட்ட நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. அதன் விவரங்கள்:-

1954: இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்பட்ட முதல் கும்பமேளாவில், அமாவாசை நாளில் புனித நீராட பிரயாக்ராஜில் ஏராளமான பக்தர்கள் குவிந்தபோது நெரிசல் ஏற்பட்டது. இதில் கிட்டத்தட்ட 800 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

1986: ஹரித்வாரில் நடந்த கும்பமேளாவில் குறைந்தது 200 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அப்போதைய உ.பி. முதல்-மந்திரி வீர் பகதூர் சிங், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஹரித்வாருக்கு வந்தபோது இந்த குழப்பம் ஏற்பட்டது.

2003: மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற கும்பமேளாவின் போது புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் கோதாவரி நதியில் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் காயமடைந்தனர்.

2013: பிப்ரவரி 10ம் தேதி அகலகாபாத் ரெயில் நிலையத்தில் கும்பமேளாவின் போது ஒரு நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் உயிரிழந்தனர் மற்றும் 45 பேர் காயமடைந்தனர்.

2025: அமாவாசை தினமான இன்று திரிவேணி சங்கமத்தில் (ஜன.29) அதிகாலை புனித நீராட மக்கள் பெரும் அளவில் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article