
சென்னை, ஜார்ஜ் டவுனில், பதிவுத்துறையின் வரலாற்றை சிறப்பிக்கும் விதமாக, புனரமைக்கப்பட்ட புராதான கட்டடத்தில் செயல்பட உள்ள பதிவுத்துறையின் அலுவலகங்களை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்
பதிவுத்துறைக்கு சொந்தமான 160 ஆண்டுகள் பழமை வாய்ந்த புராதான கட்டடம் சென்னை ஜார்ஜ் டவுன் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டடம் 1864-ம் ஆண்டு இந்தோ சாரசனிக் கட்டடக்கலை நயத்துடன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்கது. இப்புராதான கட்டடம் மெட்ராஸ் நாட்டு தளக்கூரை (Madras Terrace Roof) பின்பகுதி மங்களுர் ஓட்டு கூரை (Mangalore Tiled Roof) மற்றும் தேக்கு மர உத்திரங்களால் ஆன 24,908 சதுரடி பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது.
பல ஆண்டுகள் கழித்து, வலுவிழந்த நிலையில் காணப்பட்ட இப்புராதான கட்டடத்தை பழமை மாறாமல் மேம்படுத்தபட்ட வசதிகளுடன் புனரமைப்பு செய்ய அரசு முன்னுரிமை வழங்கி ரூ.9.85 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.