சங்ககிரி, ஜூலை 4: இடைப்பாடி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து 4 மாத கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2 நாட்களுக்கு முன் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், 4 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. திருமண வயதை எட்டுவதற்கு முன்பே கர்ப்பிணியானது பற்றி மருத்துவர்கள் விசாரித்ததில், காதல் திருமணம் செய்து வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் (பொ) தனலட்சுமி, எஸ்ஐ மீனா ஆகியோர் கர்ப்பிணியான சிறுமியிடம் விசாரித்தனர்.
அதில், தனது தாய், தந்தை இருவரும் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு சென்று வந்த நிலையில், தன்னுடைய வீட்டின் வழியே வந்துச்சென்ற இடைப்பாடி கலர்காடு சித்திரபாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராம்குமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு, ஒன்றாக குடும்பம் நடத்தினோம். அதனால் கர்ப்பமாகிவிட்டேன், எனக்கூறியுள்ளார். இதையடுத்து 15 வயது சிறுமியை திருமணம் செய்து 4 மாத கர்ப்பிணியாக்கிய லாரி டிரைவர் ராம்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
The post 15 வயது சிறுமியை திருமணம் செய்து 4 மாத கர்ப்பிணியாக்கிய டிரைவர் appeared first on Dinakaran.