15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி.க்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி: 2-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தல்

2 months ago 20

காலே: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி சாதனை படைத்தது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன் குவித்து (163.4 ஓவர்), முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது (சண்டிமால் 116, மேத்யூஸ் 88, கமிந்து மெண்டிஸ் 182*, குசால் 106*).

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து நிஷான் பெய்ரிஸ் – பிரபாத் ஜெயசூரியா சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 88 ரன்னுக்கு (39.5 ஓவர்) சுருண்டது. பிரபாத் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 514 ரன் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து மழையால் பாதிக்கப்பட்ட 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்திருந்திருந்தது. பிளண்டெல் 47 ரன், பிலிப்ஸ் 32 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்தது.

பிலண்டெல் 60 ரன் (64 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெய்ரிஸ் சுழலில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பிலிப்ஸ் 78 ரன்னில் (99 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) பெவிலியன் திரும்ப… கேப்டன் சவுத்தீ 10, அஜாஸ் படேல் 22 ரன் எடுத்து ஜெயசூரியா பந்துவீச்சில் கிளீன் போல்டாகினர். சான்ட்னர் 67 ரன் (115 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெய்ரிஸ் சுழலில் விக்கெட் கீப்பர் குசால் மெண்டிசால் ஸ்டம்பிங் செய்யப்பட, நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 360 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (81.4 ஓவர்).

இலங்கை பந்துவீச்சில் அறிமுக சுழல் நிஷான் பெய்ரிஸ் 6, பிரபாத் 3, தனஞ்ஜெயா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய இலங்கை அண 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. கமிந்து மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருதும், பிரபாத் ஜெயசூரியா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இலங்கை வரலாற்று சாதனை படைத்துள்ளது.

The post 15 ஆண்டுகளுக்கு பிறகு நியூசி.க்கு எதிராக இலங்கை வரலாற்று வெற்றி: 2-0 என ஒயிட்வாஷ் செய்து அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article