15 to 60 வயது பெண்களின் பிரச்னைகளும் ஆயுர்வேத சிகிச்சையும்!

1 month ago 6

நன்றி குங்குமம் தோழி

ஆயுர்வேதம்… பழமையான சிகிச்சை முறை. பொதுவாக இதில் உடல் வலி, மூட்டு வலிக்கான மசாஜ்தான் செய்வார்கள் என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் ஆயுர்வேதத்தில் அனைத்து பிரச்னைகளுக்கான சிகிச்சைகள் உள்ளன. அறுவை சிகிச்சை இல்லாமல், பிரச்னைக்கான தீர்வு அளிக்க முடியும் என்பதை மருத்துவர்கள் நிரூபித்தும் வருகிறார்கள். ‘‘பெண்களுக்கு சாதாரண ஜுரம் முதல் மகப்பேறு சம்பந்தமான அனைத்து பிரச்னைக்கும் இதில் தீர்வு காண முடியும்’’ என்கிறார் கேரளா, கொச்சியில் உள்ள சஞ்சீவனம் மருத்துவமனையின் பெண்கள் மற்றும் மகப்பேறு நிபுணரான டாக்டர் ஹிர்தயா. ‘‘சிகிச்சைக்காக வருபவர்கள் பிரச்னைக்கு ஏற்ப தங்கி சிகிச்சை பெறலாம்.

அதற்கான இடம், உணவு என அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளது. ஐந்து தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் ஒவ்வொரு தளத்தில் தங்குவதற்கு மட்டுமில்லாமல், சிகிச்சைக்கான அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. உணவு ஆலோசகரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நோயாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது’’ என்றவர் பெண்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து விவரித்தார். ‘‘பெண்‌களின் மகப்பேறு பிரச்னைக்கும்‌ ஆயுர்வேதத்தில் ஒரு முழுமையான தீர்வினை பெற முடியும். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் பூப்படையும் நாள் முதல் மெனோபாஸ் நாள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். ஒரு பிரச்னைக்கான தீர்வு மட்டுமே பார்க்காமல், அதன் காரணிகளை கண்டறிந்து முழுமையான சிகிச்சை அளிப்பதால், நல்ல பலனை பெறலாம்.

மாடர்ன் மருத்துவத்தில் பெண்களுக்கு மகப்பேறு, குழந்தை பிறப்பு, ஹிஸ்டரெக்டமி, கருப்பை சம்பந்தமான தொற்று, ஃபைப்ராய்ட்ஸ் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை முறைகளைதான் அதிகம் பின்பற்றுகிறோம். ஆனால் ஆயுர்வேதத்தில் 15 முதல் 60 வயதுள்ள பெண்கள் சந்திக்கும் அனைத்து பிரச்னைக்கும் அறுவை சிகிச்சையின்றி தீர்வுண்டு. அதேசமயம் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றால் அதற்குரிய சிகிச்சை முறைகளை பின்பற்ற பரிந்துரைக்கிறோம். பெண்களுக்கு மகப்பேறு சார்ந்த பிரச்னைகள் மட்டுமே ஏற்படுவதில்லை. ஹார்மோன் மாற்றத்தினால் மூட்டு வலி, ஆட்டோ இம்யூன், சருமம், தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் சந்திக்கிறார்கள்.

இதற்கான தீர்வினை ஆயுர்வேதத்தில் முழுமையாக கொடுக்க முடியும். ஒரு பெண் பருவம் அடையும் போது அவள் உடலில் ஏற்பட துவங்கும் ஹார்மோன் மாற்றங்கள் 55 வயதில் மெனோபாஸ் வரை நீடிக்கும். அதனால் அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக பாதிப்படைகிறார்கள். பெண்களின் பருவ நிலைக்கு ஏற்ப சந்திக்கும் பிரச்னையை கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை அளிக்கிறோம். தற்போது பெரும்பாலான பெண்கள் குழந்தையின்மை பிரச்னையால் அவதிப்படுகிறார்கள்.

அதற்கு ஆயுர்வேதம் நல்ல பலனை தருகிறது. கருவுற்று இருக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகும் அவர்கள் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை அளிக்கிறோம். இதன் மூலம் அவர்கள் இழந்த ஆரோக்கியத்தை மீட்டுத்தர ஆயுர்வேத முறையில் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் உள்ளன. சில பெண்கள் கருத்தரித்த பிறகு கால்சியம் குறைபாடு ஏற்படும். அதே போல் மெனோபாஸ் காலத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள், கால்சியம் சத்துக்கள் நிறைந்த கம்பு, கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஆனால் இன்று நாம் வாழும் சூழல் மற்றும் வாழ்வியல் மாற்றம் காரணமாக 40 வயதிலேயே பெண்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள். அதை மீட்டெடுக்க ஆயுர்வேதம் வழிவகுக்கிறது.

கருத்தரிப்பு பிரச்னைக்கு பைப்ராய்ட்ஸ், பாலிசிஸ்டிக் ஓவரிதான் காரணமாக இருந்தது. ஆனால் இன்று எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பைக்கு வெளியே வளரக்கூடிய திசு), அடினோமயோசிஸ் (கருப்பையின் தசை சுவர் பகுதியில் வளரும் திசு) பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். மாதவிடாய் பிரச்னையில் ஆரம்பித்து கருத்தரிப்பது வரை பாதிக்கிறது. திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கினாலும், மீண்டும் வளர வாய்ப்புள்ளது. அடுத்து பெண்கள்‌ சந்திக்கும்‌ முக்கிய பிரச்னை மெனோபாஸ்‌.

இந்த காலக்கட்டத்தில்‌ அதிகமாக கோபப்படுவார்கள், உடல் பருமன் அதிகரிக்கும். இதற்கு யோகா முழு தீர்வு அளிக்கும்‌. வேலைக்கு செல்லும் பெண்கள் கணினி பார்ப்பதால்‌ ஏற்படும்‌ கண்‌ பிரச்னைக்கும் தனிப்பட்ட சிகிச்சை உள்ளது. குழந்தையின்மை, ஆண்‌-பெண்‌ இருவருக்குமான பிரச்னை, ஹார்மோன்களில்‌ மட்டும்‌ மாற்றம்‌ ஏற்படுத்தாமல்‌, உடல்‌ முழுதும்‌ மாற்றத்தினை கொடுக்கும்‌ போது நல்ல பலனை பார்க்க முடிகிறது. ஆண்களுக்கு விந்தணு குறைபாடு இருந்தால்‌ அதற்கான சிகிச்சைகள்‌, வாழ்க்கை முறையில்‌ மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பாலி சிஸ்டிக்‌ ஓவரி மற்றும்‌ ஃபைப்ராய்ட்‌ பிரச்னைக்கும்‌ சிகிச்சையுள்ளது.

அறுவை சிகிச்சை மற்றும்‌ எமர்ஜென்சி சிகிச்சை முறைகள்‌ தவிர பெண்கள் சார்ந்த அனைத்து பிரச்னைக்கும்‌ ஆயுர்வேதம்‌ நல்ல பலனைக்‌ கொடுக்கும்‌. இவை தவிர ஃபேஷியல்‌, பெடிக்யூர்‌, மெனிக்யூர்‌, முடி உதிர்தலுக்கான சிகிச்சை, சரும பளபளப்பு, பாடி மசாஜ்‌, ஃபுட்‌ ரிப்‌லெக்சாலஜி என அழகியல்‌ சார்ந்த தனிப்‌பட்ட சிகிச்சைகள்‌ ஹெர்பல்‌ முறையில்‌ செய்யப்படுகிறது. மேலும் ஒருவரின் நிலைக்கு ஏற்ப அபயங்கா, ஷிரோதாரா, பஞ்சகர்மா, கிழி போன்ற மசாஜ்களும் வழங்கப்படுகிறது.

சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் கடைபிடிக்கக்கூடிய யோகாசனம் மற்றும் உணவு முறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். அவர்கள் அதனை மருந்துகளுடன் கடைபிடித்து வந்தால் கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கையை தன் வசமாக்கிக் கொள்ள முடியும்’’ என்றார் பெண்கள் மற்றும் மகப்பேறு நிபுணர் ஹிர்தயா.

மகப்பேறு நிபுணர்: ஷம்ரிதி

 

The post 15 to 60 வயது பெண்களின் பிரச்னைகளும் ஆயுர்வேத சிகிச்சையும்! appeared first on Dinakaran.

Read Entire Article