டெல்லி: நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பாஜக தலைவர்கள் அறிவிக்கப்பட்டதால் இம்மாதம் 3வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர் ேதர்வு செய்யப்படுவார் என்றும், தமிழ்நாட்டிற்கு அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக கட்சியை பொருத்தமட்டில் அக்கட்சியின் தேசியத் தலைவர் என்பவர் தலா 3 ஆண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகிக்கலாம். இதற்கு வழிவகுத்த திருத்தம் 2012ல் மூத்த தலைவரான நிதின் கட்கரியை தொடர்ந்து இரண்டாவது முறையாக கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்பியபோது செய்யப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் நிதின் கட்கரிக்கு பதிலாக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், 2014 மக்களவைத் தேர்தலில் கட்சி வெற்றி பெறும் வரை பதவியில் இருந்தார். அதன்பின் அமித் ஷா தேசிய தலைவரானார்.
அவரை தொடர்ந்து 2020 ஜனவரி முதல் பாஜக தேசிய தலைவராக தற்போதைய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி நட்டா இருந்து வருகிறார், மேலும் அவரது பதவிக்காலம் 2023ல் முடிவடைந்ததில் இருந்து பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பிரதமர் மோடி, நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு சென்று அங்குள்ள மூத்த தலைவர்களிடம் ஆலோசனை நடத்தினார். எனவே அடுத்த தேசிய தலைவராக தேர்வு செய்யப்படும் நபர் முழுக்க ஆர்எஸ்எஸ் சிந்தனையாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது. பாஜகவின் உட்கட்சித் தேர்தல்கள் பல மாநிலங்களில் முடிவுற்றதால், புதிய தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணி அடுத்த சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். கிட்டத்தட்ட 13 மாநிலங்களில் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் நிறைவடைந்தன.
வரும் 4ம் தேதியுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதால், அதன் பிறகு அடுத்த பாஜக தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை வேகம் எடுக்கும். அதாவது ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தனது புதிய தேசியத் தலைவரை பாஜக அறிவிக்க வாய்ப்புள்ளது. உத்தரபிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கான மாநில பாஜக தலைவர்களின் அறிவிப்பு அடுத்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னரே புதிய தலைவர் செயல்முறைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கும். புதிய தலைவர்கள் பட்டியலில் மனோகர் லால் கட்டார், பிரகலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான், அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. வரும் 15ம் தேதிக்குள் உட்கட்சி தேர்தல் நடைமுறைகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டை பொருத்தவரை அண்ணாமலை மாநில தலைவராக இருந்து வருகிறார். அவரே மாநில தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்று பாஜக டெல்லி தலைமை விரும்புகிறது. அதேநேரம் 2026 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் டெல்லி தலைமை விரும்புகிறது. எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோல் அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவை எடப்பாடி எதிர்த்து வருகிறார். பாஜக தலைமை ஒரு பாதையில் சென்றால், அண்ணாமலை ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறார். அதனால் அவரையே பலிகடாவாக்கி, அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை அறிவித்துவிடலாம் என்று டெல்லி தலைமை நினைக்கிறது.
மேலும் அண்ணாமலைக்கு வேறு ஏதாவது பதவியை கொடுத்து அவரை திருப்தி படுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. ஒருவேளை அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கவில்லை என்றால், அதிமுகவை எப்படி கூறு போடலாம் என்றும் டெல்லி பாஜக தலைமை யோசித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் கடந்த சில நாட்களாக எடப்பாடி, செங்கோட்டையன் போன்ற தலைவர்கள் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
The post 13 மாநிலங்களில் தலைவர்கள் அறிவிக்கப்பட்டதால் இம்மாதம் 3வது வாரத்தில் பாஜகவுக்கு புதிய தேசிய தலைவர்?.. தமிழ்நாட்டிற்கு அடுத்த வாரம் அறிவிப்பு appeared first on Dinakaran.