12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!

3 weeks ago 6

இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குபவர் வியாசபகவான். பராசர முனிவருக்கும், சத்தியவதி எனும் பரிமளகந்திக்கும் மகனாய்ப் பிறந்தவர். வியாசருடைய இயற்பெயர் ‘கிருஷ்ணத்வையாயனர்’. வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை. வியாசபகவான் இவ்வேதங்களைத் துவாபரயுக முடிவில், நான்காகப் பிரித்து, கேட்டு ஸ்வரத்தோடு அத்தியாயனம் செய்து சீடர்களான ஜைமின், வைசம்பாயனர், சுமந்து, பைலர் ஆகிய நான்கு முனிவர்களிடம் ஒப்படைத்து பின்பு வேதத்தின் தாத்பர்யத்தை பதினெண் புராணங்களாக்கினார். மகாபாரதம் இயற்றிய வரும் இவரே. ‘மகாபாரதம்’ ஒரு உன்னதமான பக்தி காவியம்’. மானிடர் வாழ்வுக்குத் தேவையான பல பொக்கிஷங்கள் அதில் குவிந்துள்ளன.

பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளிய ‘பகவத் கீதை’யோடு, ‘விஷ்ணுசகஸ்ர நாமம்’, ‘விதுரநீதி’, ‘யட்சபிரச்னம்’, ‘தௌம்மியர் அறிவுரை’, ‘தர்மர் திருதிராஷ்டிரருக்கு அருளிய அறிவுரை’ போன்ற பல பகுதிகளும் நாம் அவசியம் படிக்க வேண்டிய சிறந்த பகுதிகளாகும். இன்னும்கூற வேண்டுமானால், ‘மோட்ச தர்மம்’ என்ற ஒரு பகுதியும் உண்டு. அதிலே இல்லாத தர்ம சாஸ்திர விஷயங்களே இடையாது.

இவற்றையெல்லாம் வியாசர் பகவான் பல்லாயிரக்கணக்கான ஸ்லோகங்களால் ‘மகாபாரதம்’ எனும் மாபெரும் காவியத்தில் உருவாக்கியுள்ளார். இவற்றையெல்லாம் வியாசபகவான் சுகமுனிக்கு உபதேசித்தார். சுகமுனிவர், தம் தந்தையைப் பார்த்து, ‘தந்தையே, பல லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மகாபாரதத்தையும், பதினெண் புராணங்களையும் யாரால் படிக்க இயலும்? படிப் போர்க்கு வாழ்நாள் போதாதே! மகாபாரதத்தை முழுமையாக ஓதின பலன் தரும் ஸ்லோகம் ஏதேனும் உண்டா?’’ என்று கேட்க, உடனே வியாசர், ‘‘அருமையான ஸ்லோகம் ஒன்று உண்டு கேள் மகனே! அவற்றை சொல்வது மகாபாரதத்தை முழுமையாகப் பாராயணம் செய்த பலனைத் தரும்’’ என்றார். அவர் கூறிய ஸ்லோகம் இது;

‘‘மாதா பித்ரு சஹஸ் ராணி, புத்ர தார சதானிச
ஸம் ஸாரேஷ்வனு பூதானி யாந்தி யாஸ்யந்தி ச அபரே
ஹர்ஷ ஸதான ஸஹஸ்ராணி, பயஸ் தான சதானிச
திவஸே திவஸே மூடம் ஆவி சந்தி, ந பண்டிதம்
ஊர்த்வபாஹீர் விரௌம்யேஷ ந ச கஸ்சித் ச்ருணோதிமே
தர்மாத் அர்த்தஸ்ச காமஸ்ச ஸ கிமர்த்தே நஸேவ்யதே
ரஜாது காமாந் ந பயாந் ந லோபாத்

தர்மம் த்யஜே ஜீவி தஸ்யாவி ஹேதோ;
நித்யோ தர்ம ஸூக துஹ்கே த்வநித்யே
ஜீவோ நித்யோ ஹேதுரஸ்ய த்வ நித்ய:
இமாம் பாரத ஸாவி த்ரீம் ப்ராதருத்தாயய : படேத்
ஸ பாரத பலம் ப்ராப் ய பரம் ப்ரம் ஹாதிகச் சதி!’’
என்ற ஒரு ஸ்லோகத்தை வியாசபகவான் கூறினார்.
மேற்கண்ட ஸ்லோகங்களின் பொருள் வருமாறு:

‘‘பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், தந்தையரும், நூற்றுக் கணக்கான மகன்களும், மனைவிமார்களும் உலகில் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதனின்றும் பிரிந்து கொண்டே இருக்கிறார்கள். இதே போல், இன்னும் பலரும் தோன்றுவார்கள். பின்னர் பிரிவார்கள். இன்பத்தைத் தோற்று விக்கக்கூடிய ஆயிரக்கணக்கான சந்தர்ப்பங்களும், துன்பத்தையும் அச்சத்தையும் தோற்றுவிக்கக் கூடிய நூற்றுக் கணக்கான நிகழ்ச்சிகளும், உலகில் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், இவை எல்லாம் எதுவும் அறியாதவனைத்தான் பாதிக்குமே தவிர, ஞானமுள்ளவனை இவற்றில் எதுவுமே பாதிக்காது. இருகைகளையும் உயரத்தூக்கியபடி, நின்று கொண்டு, நான் உரத்த குரலில் கூவிக் கொண்டே இருக்கிறேன்.

ஆனால், யாரும் செவி மடுக்கவில்லை. இன்பத்திற்கும் செல்வத்திற்கும் தர்மம்தான் ஆதாரம். அப்படி இருக்க, ஏன் எல்லோரும் தர்மத்தை நாடக் கூடாது? இன்பத்தை நினைத்தோ, அச்சத்தின் காரணமாகவோ, ஆசையின் விளைவாகவோ, ஒரு போதும் தர்மத்தின் பாதையில் இருந்து தவறிவிடக் கூடாது. தர்மம் ஒன்றுதான் நிலையானது! ஜீவன் நிலையானது. அது ஒரு உடலை அடையும் காரணமோ நிலையற்றது!’’ என்றார் வியாசர்.‘‘வியாசபகவான் அருளிய அற்புதமான இந்த ஸ்லோகங்களை அதிகாலையில் எழுந்து ஆழ்ந்த பக்தி உணர்வோடு படிப்பவர்கள், மகாபாரத காவியத்தை முழுமையாக பாராயணம் செய்த பலனைப் பெற்று நற்கதி அடைவார்கள்’’ என்று மகாஞானிகளும்,மாமுனிபுங்கவர்களும் அருளியிருக்கிறார்கள்!

முத்துவேல்

 

The post 12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்! appeared first on Dinakaran.

Read Entire Article