*சப் கலெக்டர் நேரில் ஆய்வு
காரைக்கால் : புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையில் 256 அசிஸ்டென்ட் (குரூப்-பி) பதவி நேரடி ஆள்சேர்ப்பு போட்டி தேர்வு மூலம் நிரப்பப்ப அறிவிக்கப்பட்டது. இப்பதவிக்கு புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் இருந்து 32,692 பேர் விண்ணப்பித்தனர்.
இப்பதவிக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு இரண்டாம் நிலைத் தேர்வானது காரைக்காலில் (TIER-II) நேற்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் அசிஸ்டன்ட் பதவிகளுக்காக நேரு நகர் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பத்து தந்தை பெரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் (TIER-II) தேர்வுகள் நடைபெற்றது.
தேர்வுகள் பாதுகாப்பாகவும் 100 சதவீதம் நேர்மையாகவும் நடைபெறுவதற்காக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சோமசேகர் அப்பாராவ் அறிவுறுத்தலின் பேரில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. காலை 9.15 மணிக்குள் தேர்வு மையங்களில் வருகை தந்த தேர்வர்களுக்கு மட்டுமே பயோ-மெட்ரிக் வருகை பதிவை எடுத்த பிறகு அறைக்குள் அனுமதிக்கபட்டனர்.
பின்னர் காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தின் பிரதான வாயில் மூடப்பட்டு, தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் ஹால் டிக்கெட், அசல் அடையாள அட்டை மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே கொண்டு வர அனுமதி அளிக்கப்பட்டு தேர்வுகள் தொடங்கப்பட்டது. தேர்வு மையத்திற்குள் பைகள், மொபைல் போன்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டு வர தடை செய்யப்பட்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற அசிஸ்டன்ட் தேர்வானது மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
தேர்வு அறையில் கடுமையான அமைதி மற்றும் ஒழுக்கம் கடைபிடிக்கப்பட்டது.காரைக்காலில் உள்ள நேரு நகர் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பத்து தந்தை பெரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களில் நடைபெற்ற அசிஸ்டென்ட் தேர்வை காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது தேர்வு 100 சதவீதம் நேர்மையாகவும், பாதுகாப்புடனும் நடக்க வேண்டுமென அறை கண்காணிப்பாளர்கள், தேர்வு மைய மேற்பார்வையாளர்களிடம் மாவட்ட துணை ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
நேற்று நடைபெற்ற அசிஸ்டென்ட் பதவி நேரடி ஆள்சேர்ப்பு போட்டியில் 1120 பேர் தேர்வுகளை எழுத விண்ணப்பித்ததில் 1075 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் மாவட்டத் துணை ஆட்சியரும் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தலைமையில் காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குனரும் தேர்வுகள் மண்டல அதிகாரி சச்சிதானந்தம், ஆய்வு அதிகாரிகள் வெங்கடகிருஷ்ணன், அருணகிரிநாதன், சுபாஷ் மற்றும் மேற்பார்வையாளர்கள், தேர்வு மைய அதிகாரிகள் ஆகியோர் தேர்வு பணிகளில் ஈடுபட்டனர்.
The post 1075 நபர்கள் எழுதினர் அசிஸ்டென்ட் குரூப்-பி பதவிகளுக்கு தேர்வு appeared first on Dinakaran.