101 டிகிரி சுட்டெரித்த வெயில்

3 months ago 23

கரூர், செப். 30: கரூரில் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக தென்மேற்கு பருவமழை போக்கு காட்டி, 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதியடைந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை என ஆண்டு சராசரி மழையளவு 652.20 மிமீ ஆகும். இதில், ஜனவரி, பிப்ரவரி ஆகிய பனிக்காலத்தில் 16.80 மிமீ., கோடைக்காலமான மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் 109.50 மிமீட்டரும், தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் 238.40 மிமீட்டரும், வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 287.50 மிமீட்டரும் என 652.20 மிமீட்டர் மழையை மாதம் வாரியாக கரூர் மாவட்டம் பெற்று வருகிறது.

இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் கோடை காலம் என்பதால் இந்த மாதத்தில் அவ்வப்போது ஒரளவு மழை பெய்திருந்தாலும், கடந்தாண்டுகளைவிட, மே மாதத்தில் தினமும் 100 முதல் 105 வரை வெயில் வாட்டியது. ஒரு சில நாட்கள் மாவட்டத்தில் 110 டிகிரியும் சுட்டெரித்தது. இந்த வரலாறு காணாத வெயில் காரணமாக, பழ வகைகள், பழச்சாறுகள், பனை நுங்கு, இளநீர், பதநீர், மோர், கூழ் என மக்கள் சுட்டெர்கும் வெயில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள குளிர்பானக் கடைகளுக்கு படையெடுத்தனர். கடந்தாண்டுகளைப் போல, தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்தால், வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என பொதுமக்கள், விவசாயிகள் நம்பினர். ஆனால், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அவ்வப்போது ஒரளவு மழை பெய்தது. இருப்பினும் வெயிலும் லேசாக தலைகாட்டியது.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், செப்டம்பர் 1ம் தேதி முதலே தினமும் சுட்டெரிக்கும் வெயில் கடுமையாக தாக்கி வருகிறது. தினமும் 90 டிகிரி முதல் 100 டிகிரி வரை இருந்தது. இந்த உச்ச செயில் காரணமாக மக்கள் கோடை காலத்துக்கு நிகரான தொந்தரவுகளை அனுபவித்து வந்தனர்.

மேலும், கரூர் மாவட்டத்தில் தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் பதிவாகி வருவதால் எப்போது இந்த நிலையில் இருந்து மாற்றம் ஏற்படும் என்ற ஏக்கத்தில் மக்கள் உள்ளனர். அதிலும், க.பரமத்தி பகுதியில்தான் தினமும் 100 டிகிரியை தாண்டியும் வெயில் சுட்டெரித்து, அனல்காற்று வீசி வந்தது. நேற்று 101 டிகிரி வெயில் தாக்கியதால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டிற்குள்ளே முடங்கினர். இதனால், சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டன. சில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களாக குறிப்பிடத்தக்க மழையை மாவட்டம் பெறாத நிலையில், இனி வரும் மூன்று மாதங்களிலாவது அதிகளவு மழையை பெற்று 2024ம் ஆண்டில் அதிகளவு மழையை பெற்று நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வேளாண் தொழில் மேம்பாடு அடையும், குடிநீர் தேவை தன்னிறைவு பெறும் .

கரூர் மாவட்டத்தில் நேற்று 101 டிகிரி வெயில் தாக்கியதால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டிற்குள்ளே முடங்கினர். இதனால், சாலைகள் வாகனப் போக்குவரத்து குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டன.

The post 101 டிகிரி சுட்டெரித்த வெயில் appeared first on Dinakaran.

Read Entire Article