மதுரை: ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் வேலை நாட்களையும் குறைத்து விட்டதால் தங்களது வாழ்வாதாரம் குறைக்கப்பட்டுள்ளதாக திட்ட பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் கிராம புறங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் முதியோர் பணியாற்றும் இந்த திட்டத்தின் கீழ் யாருக்கும் முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதில்லை என்றும், வேலை செய்த கூலியும் பல மாதங்கள் நிலுவையில் வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கடந்த ஏப்ரல் மற்றும் நடப்பு மே மாதத்தில் மொத்தம் 2 கோடியே 9 ஆயிரம் மனித வேலை நாட்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 59 லட்சம் மனித வேலை நாட்கள் மட்டுமே கிடைத்ததாகவும், ஒன்றிய அரசின் அநீதியால் தமிழ்நாட்டு கிராமப்புற உழைப்பாளி மக்கள் 82 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ரூ.1,400 கோடி நிதி கிடைக்காமல் பணி நாட்களை குறைக்க வேண்டி இருப்பதாக வெளியான இணைய செய்தியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திட்டத்தை முடக்கி தமிழ்நாட்டு மக்களை மோடி அரசு நிதிப் பட்டினி போடுவதாகவும் அவர் சாடியுள்ளார். 100 நாட்கள் வேலை வழங்காமலும், முறையாக ஊதியம் வழங்காததாலும் தங்களது வாழ்வாதாரமே கேள்வி குறியாகி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ள தொழிலாளர்கள், ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலை திட்ட நிலுவை நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஒன்றிய அரசின் தொடர் செயல்பாடுகளால் 100 நாள் வேலை திட்டமே முடங்கிவிடுமோ என்ற அச்சமும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
The post 100 நாள் திட்டத்தை முடக்கி நிதிப் பட்டினி போடும் மோடி அரசு: வேலை நாட்களுக்கு உரிய நேரத்தில் கூலி வழங்க பணியாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.