100 அடியை எட்டியது சாத்தனூர் அணை - 5 நாட்களில் நீர்மட்டம் 4 அடி உயர்வு

4 weeks ago 8

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் இன்று (அக்டோபர் 17-ம் தேதி) பிற்பகல் 12 மணியளவில் 100 அடியை எட்டியது. வட கிழக்கு பருவ மழை மற்றும் தென் பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வருவதால், கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தென் பெண்ணையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளன. இதனால் 5 நாட்களில் அணையின் நீர்மட்டம் 4 அடி அதிகரித்து, 100 அடியை இன்று எட்டியது.

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13-ம் தேதி காலை 6 மணி நிலவரப்படி 96.15 அடியாக இருந்தது. அணையில் 3,215 மில்லியன் கனஅடி தண்ணீரும், அணைக்கு விநாடிக்கு 312 கனஅடி தண்ணீரும் வந்தன. இந்நிலையில் மழையின் தாக்கம் தீவிரமடைந்ததால், கடந்த 3 நாட்களாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை 6 மணி நிலவரப்படி 99.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,585 கனஅடி தண்ணீர் வந்தது. பின்னர் நீர்வரத்து அதிகரித்து, விநாடிக்கு 2,037 கனஅடியாக வர தொடங்கியது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று(அக்டோபர் 17-ம் தேதி) பிற்பகல் 12 மணி நிலவரப்படி 100 அடியை எட்டியது. 7,321 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட அணையில் 3,754 மில்லியன் கனஅடியாக தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் மழை இல்லை.

Read Entire Article