10 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன

1 month ago 4

விழுப்புரம், டிச. 10: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக தொடர் விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் மாணவ, மாணவிகள் சென்றனர். இதனிடையே தண்ணீர் வடியாத 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதித்த பள்ளிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் புதிதாக வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டன. புயல், மழை விட்ட போதும் பல இடங்களில் பள்ளி, கல்லூரிகள் நிவாரண மையங்களாக பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலும் தரைப்பாலங்கள் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

இதனால் மாணவ, மாணவிகள் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக வீட்டிலேயே இருந்தனர். தொடர்ந்து 9ம் தேதி முதல் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்றைய தினம் 10 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. முன்னதாக மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்கள், சுற்றுச்சுவர்கள் உறுதி செய்யப்பட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நேற்று பள்ளிகள் திறந்ததும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் சென்றனர். இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக மரக்காணம் ஒன்றியத்தில் 5 பள்ளிகளுக்கும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 2 பள்ளிகளுக்கும் சாலை வசதி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மொத்தம் 7 பள்ளிகளுக்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளித்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
மரக்காணம் ஒன்றியத்தில் ஓமந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கந்தாடு அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, வண்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீழ்சித்தாமூர் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் யார், யாரிடம் மழையால் புத்தகங்கள் சேதமடைந்தது என்ற விவரங்கள் கணக்கெடுப்பு நடத்தி புதிய நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பெஞ்சல் புயலின் தாக்கத்தின் காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த பெருமழை ெவள்ளத்தால் குடியிருப்புகளில் மழை, வெள்ளம் சூழ்ந்ததால் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பாடப்புத்தகங்களும் சேதமடைந்தது.

இந்நிலையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து கல்வி கற்க ஏதுவாக விலையில்லாத பாடப்புத்தகங்கள் அனைத்து பள்ளிகள் மூலமாக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு பிற பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவரவர் பள்ளிகளிலேயே இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

The post 10 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன appeared first on Dinakaran.

Read Entire Article