1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டம்: மேயர் பிரியா தகவல்

2 weeks ago 6

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. இதில், கேள்வி நேரத்தின் போது 88வது வார்டு திமுக கவுன்சிலர் நாகவள்ளி பேசுகையில், ‘சென்னையில் தெருநாய்கள் பிரச்னை அதிகமாக உள்ளது. செல்லப்பிராணிகள் மையத்தில் தெருநாய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய்கள் கருத்தடை குறித்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது?’ என கேள்வி எழுப்பினார்.

மேயர் பிரியா: சென்னை மாநகராட்சியில் 5 இடங்களில் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகிறது. 2024-25ம் நிதியாண்டில் 26 ஆயிரத்து 760 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 20 ஆயிரத்து 505 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போது 16 நாய் பிடிப்பதற்கான வாகனம் உள்ளது. நடப்பு ஆண்டில் கூடுதலாக 11 வாகனம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி, அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அதிமுக கவுன்சிலர் கதிர்முருகன்: குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் பெயர்கள், விலாசம் எழுத்துப் பிழையுடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் குழந்தைகள் பள்ளியில் சேரும்போது பல்வேறு இன்னல்களை சந்திக்கிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும். மேயர் பிரியா: பிறப்பு சான்றிதழ்களை பொறுத்தவரையில் மருத்துவமனை தரவுகளை கொண்டுதான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாநகராட்சி மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுடன், பிறப்பு சான்றிதழின் பிழைகளை சரிசெய்யும் முகாம்களும் இணைந்து நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

182வது வார்டு திமுக கவுன்சிலர் சதீஷ்குமார்: ஏரியா சபை கூட்டம் வைப்பதால் கவுன்சிலர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. கூட்டத்தில் பொதுமக்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் தீர்த்து வைப்பது இல்லை. அனைத்து வார்டுகளிலும் இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேயர் பிரியா: 200 வார்டுகளிலும் ஒரு இ-சேவை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

38வது வார்டு திமுக கவுன்சிலர் கண்ணன்: சென்னையிலும் வட மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. சொந்த ஊரிலும் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கின்றனர். இதனால் 2 இடங்களிலும் வாக்களிக்க நேரிடும்.துணை மேயர் மகேஷ்குமார்: இது மிகவும் முக்கியமான கருத்து. இதனால் பல்வேறு குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வட மாநிலத்தவர்கள் அங்குள்ள மாவட்ட தேர்தல் அதிகாரியின் தடையில்லா சான்று கடிதம் பெற்று வந்தால் மட்டுமே இங்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அதற்கு மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post 1.80 லட்சம் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டம்: மேயர் பிரியா தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article