சென்னை: “சென்னையில் கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், அவர்களை விட மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் அநீதியானது. எனவே, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறைந்தது ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2000, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6,800 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், இழப்பீட்டையும் ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் தென்படுகிறது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண உதவி சிறிதும் போதுமானதல்ல.