விவசாய நிலங்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!

4 days ago 3

நமது நாடு அதிவிரைவான நகர மயமாக்களுக்கு உட்பட்டு வருகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருவதால் கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு குடி பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகர மயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் நவீன மயமாக்கலை அதிகரிக்கும் காரணியாக விளங்குகிறது. அதேவேளை விவசாய நிலத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. விவசாய நிலங்களின் இழப்பு, நிலப் பயன்பாட்டு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், சுற்றுச்சூழல் விளைவுகள் கிராமப்புறங்களில் சமூக, பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.நகர மயமாக்கலின் நேரடியான தாக்கங்களில் ஒன்று விவசாய நிலங்களின் பரப்பளவு குறைதல். நகரங்கள் விரிவடையும்போது விவசாய நிலங்கள் பெரும்பாலும் குடியிருப்பு, வணிக மற்றும் தொழில் துறை பகுதிகளாக மாற்றப் படுகிறது. வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி இந்தியா 2000 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடையில் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்காக சுமார் 7.1 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலத்தை இழந்துள்ளது. தற்சமயம் இதன் அளவு இன்னும் கூடுதலாக மாறி இருக்கிறது. இந்தப் போக்கு தொடர்ந்து நீடித்தால் உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயம் குறித்த அச்சுறுத்தல் அதிகரிக்கும். வளமான நிலத்தின் இழப்பு விவசாய உற்பத்தித் திறனை நேரடியாக பாதிக்கிறது. மேலும் அது நகர்ப்புற மக்களின் வளர்ந்து வரும் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனையும் கடுமையாக பாதிக்கிறது.

நகர மயமாக்கல் நிலப் பயன்பாட்டு முறைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. பெரும்பாலும் விவசாய நிலங்களின் சீரழிவுக்கு அது வழிவகுக்கிறது. அடுத்தடுத்து விவசாய நிலங்கள் நகர்ப்புற நிலங்களாக மாறுவதால் பாரம்பரியமான விவசாய முறை பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் பயிர் விளைச்சல் குறைந்து உணவுப் பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. மேலும் நகர்ப்புறத்தின் அருகில் இருக்கும் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு, மாசுபாடு போன்றவற்றால் கடுமையான சவாலை எதிர்கொள்கிறது.விவசாய நிலங்களை நகர்ப்புறமாக மாற்றுவதால் வாழ்விட அழிவு, பல்லுயிர் இழப்பு, உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பில் மாற்றம் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன. இதனால் விவசாயத்திற்குத் தேவையான நீர் மற்றும் மண்வளம் போன்ற இயற்கை வளங்களை இழக்க நேரிடுகிறது. அதிகப்படியான கட்டுமானங்கள், தொழில்துறை மாசுபாடு, முறையற்ற கழிவுகளின் வெளியேற்றம் போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன. மேலும் மண் மற்றும் நீர்வள ஆதாரங்கள் முற்றிலும் மாசுபாடு அடைகிறது. விவசாய நிலங்களை நகர மயமாக்குவதால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய பயனுள்ள கொள்கை மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. நகர மயமாக்குதல் காரணமாக விவசாய நிலங்கள் குறைக்கப்படுவதால் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. பயிரிடுவதற்கான நிலம் குறைவாக இருப்பதால் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய உணவை உற்பத்தி செய்வதில் சிக்கல் உருவாகிறது. நகர்ப்புற மக்களின் உணவுத் தேவையையும் அது கடுமையாக பாதிக்கிறது.
பெருகி வரும் மக்கள் தொகையின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

உலக சந்தை ஏற்ற இறக்கம், வர்த்தகக் கொள்கையில் மாற்றம், உணவு இறக்குமதி ஆகியவற்றால் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டி இருக்கிறது. தற்போதைய நிலப் பயன்பாட்டுக் கொள்கைகள் பெரும்பாலும் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத் தேவைகளை சமநிலைப்படுத்தத் தவறிவிடுகின்றன. நில மண்டல ஒழுங்குமுறை களின் பலவீனமான நடவடிக்கை விவசாய நிலங்களைக் கடுமையாக பாதிக்கிறது. நிலப் பயன்பாட்டுக் கொள்கைகளை வலுப்படுத்துதல், நிலையான நகர்புறத் திட்டமிடல் நடைமுறைகளை ஊக்குவித்தல், விவசாய நிலங்களைப் பாதுகாக்க கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை தற்போது மிக அவசியமாகிறது. நகர மயமாக்குதலின் தாக்கத்தைக் குறைக்க கிடைமட்ட விரிவாக்கத்திற்குப் பதிலாக செங்குத்து நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் நமது விவசாய நிலங்களை அழிவில் இருந்து பாதுகாக்கலாம். திறமையான பொதுப் போக்குவரத்து, பசுமையான இடங்களின் அளவை அதிகரித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயம்.

இந்தியாவில் விவசாய நிலத்தில் நகர மயமாக்கலின் தாக்கம் ஒரு சிக்கலான பிரச்சினையாக மாறி இருக்கிறது. இதற்கு பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நகரமயமாக்கல் இன்றியமையாததாக இருந்தாலும் அது விவசாய நிலைத்தன்மை மற்றும் உணவுப் பாதுகாப்பினை அச்சுறுத்தாமல் இருக்க வேண்டும். விரிவான நிலப் பயன்பாட்டுக் கொள்கைகளை ஏற்றுக் கொள்வது, ஊக்குவிப்பது அவசியம். இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இணக்கமான மற்றும் நிலையான கொள்கைகளை உருவாக்க வேண்டும். இது கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், விவசாயிகள் மற்றும் நகர்ப்புற குடியிருப்புவாசிகளின் கூட்டு முயற்சியில் அடங்கி இருக்கிறது.

The post விவசாய நிலங்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்! appeared first on Dinakaran.

Read Entire Article