விளைச்சல் குறைவு, தீபாவளி பண்டிகையால் நெல்லையில் பல்லாரி விலை தொடர்ந்து ஏறுமுகம்: சின்ன வெங்காயம் விலையும் உயர்வதால் மக்கள் கவலை

3 weeks ago 11

தியாகராஜ நகர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் விளைச்சல் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லையில் பல்லாரி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. அத்துடன் சின்ன வெங்காயம் விலையும் உயர்வதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். அன்றாட உணவில் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் முக்கிய இடம் பிடிக்கிறது. சைவம், அசைவம் என எந்த வகை உணவாக இருந்தாலும் அதில் வெங்காயத்திற்கும் பல்லாரிக்கும் இடம் உள்ளது. இதனால் இவற்றின் நுகர்வு தினமும் அதிக அளவில் உள்ளது. பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இப்பகுதிகளில் குறிப்பிட்ட சீசன் காலங்களில் மட்டுமே பல்லாரி கிடைக்கிறது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நாசிக், கோலாப்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாரி விளைவிக்கப்படுகிறது.

தட்பவெப்ப நிலை மாறுதல், பண்டிகை போன்ற காரணங்களுக்காக பல்லாரியின் விலை திடீரென உயர்கிறது. தமிழகத்தில் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் விலை ஒரு மாதத்திற்கு முன்வரை சரிந்து இருந்தது. அதிகபட்சம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு தரமான வெங்காயம் மற்றும் பல்லாரி கிடைத்தது. சில இடங்களில் 100 ரூபாய்க்கு 4 கிலோ பல்லாரி என குவித்துவைத்து கூவிகூவி அழைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். குறிப்பாக மினி லாரிகளில் சின்ன வெங்காயம், பல்லாரியை மூடை முடையாகக் கொண்டுவந்து முக்கிய பஜார் பகுதியில் வைத்து குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருந்துவருகிறது. உள்ள நிலையில் தற்போது பல்லாரி விலையும் உயர்ந்து வருகிறது. முதல் ரக சின்ன வெங்காயம் மற்றும் பல்லாரி விலை காய்கறி சந்தைகளில் 70 ரூபாயை கடந்து விட்டது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிராவில் விளைச்சல் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லையில் பல்லாரி விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. அத்துடன் சின்ன வெங்காயம் விலையும் உயர்வதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதனிடையே தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மேலும் 5 முதல் 10 ரூபாய் வரை சில்லறை விலையில் உயர்வு ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை தச்சநல்லூர் மார்க்கெட் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் மொத்த விற்பனையாளர்கள் கூறுகையில் ‘‘பருவம் தவறிய மழை காரணமாக வட மாநிலங்களில் பல்லாரி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, மகராஷ்டிராவில் இருந்து வழக்கமாக வரும் பல்லாரி வரத்து குறைந்துள்ளது. மேலும் பல்லாரி பதுக்குவதை தவிர்க்கவும் விலை உயராமல் தவிர்க்கவும் ஒன்றிய அரசு கொள்முதல் செய்து பல்லாரியை சீரான விலையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் காரணமாக மொத்த வியாபாரிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். பல்லாரி லோடு லாரிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பண்டிகை கால தேவையும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இது போன்ற காரணங்களால் அடுத்து வரும் நாட்களில் மொத்த விற்பனை விலையில் ரூபாய் 3 முதல் 5 வரை உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக சில்லறை விற்பனை விலையும் 10 ரூபாய் வரை உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. வழக்கமாக உள்ளூர் சின்ன வெங்காயம் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 4 மாதங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வரும். இதை நெல்லை, தென்காசி மாவட்ட வியாபாரிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டளைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து கொள்முதல் செய்வார்கள்.

ஆனால், தற்போது நடப்பு ஆண்டில் இந்த சீசனில் பல்லாரி விளைச்சல் வெகுவாக இங்கும் குறைந்துவிட்டது. அத்துடன் பல்லாரியின் விளைச்சல் அளவு மற்றும் தரமும் சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக வட மாநில பல்லாரியை எதிர்பார்க்கும் நிலை உள்ளது. இதேபோல் சின்ன வெங்காயம் தாராபுரம், திருச்சி, ராசிபுரம் பகுதிகளில் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்படும் நிலையில் இதன் விளைச்சலும் தற்போது போதிய அளவு இல்லாததால் இதன் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது என்றனர். இதனால் செய்வது அறியாது பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

The post விளைச்சல் குறைவு, தீபாவளி பண்டிகையால் நெல்லையில் பல்லாரி விலை தொடர்ந்து ஏறுமுகம்: சின்ன வெங்காயம் விலையும் உயர்வதால் மக்கள் கவலை appeared first on Dinakaran.

Read Entire Article