
கருவுறுதலில் ஆணின் விந்தணு அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அசாதாரண வடிவ விந்தணுக்கள் (டெரடோஸ்பெர்மியா) கருத்தரிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கும். விந்தணு உருவவியல் என்பது விந்தணுக்களின் அளவு மற்றும் வடிவத்தைக் குறிக்கிறது. ஆரோக்கியமான விந்து பொதுவாக ஒரு ஓவல் தலை, ஒரு மெல்லிய நடுப்பகுதி மற்றும் ஒரு நீண்ட வால் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். விந்தணுவின் திறம்பட நகரும் தன்மை மற்றும் முட்டையை ஊடுருவிச் செல்லும் திறனுக்கு இந்த அம்சங்கள் முக்கியம்.
விந்தணு உருவப் பிரச்சினை மற்றும் வகைகள் வருமாறு:
1) மேக்ரோசெபாலிக்: பெரிய தலையைக் கொண்டுள்ள இந்த வகையான விந்தணுக்கள் பெரும்பாலும் கூடுதல் குரோமோசோம்களையும், பெண்ணின் முட்டையை கருத்தரிப்பதில் சிக்கல்களையும் கொண்டுள்ளன.
2) மைக்ரோசெபலி: விந்தணுவின் தலை இயல்பை விட சிறியதாக இருப்பதைக் குறிக்கிறது. சிறிய தலை விந்தணுவில் குறைபாடுள்ள அக்ரோசோம் இருப்பதால் கரு முட்டைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது.
3) பின்ஹெட்: சிறு தலை விந்தணு எனப்படும் இதில் தந்தை வழி டி.என்.ஏ உள்ளடக்கம் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும்.
4) சுருட்டு வடிவ தலைகளைக் கொண்ட விந்தணு: இது வெரிகோசில் இருப்பது, அதிக வெப்பநிலை காரணமாக விதைப்பை பாதிப்பு இருப்பதை எடுத்துக்காட்டும்.
5) குளோபோசூஸ்பெர்மியா: வட்டத் தலை கொண்ட விந்தணு எனப்படும் இது அக்ரோசோம் இல்லாததை அல்லது விந்தணு அதன் தலையின் உள் பகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் குறிக்கிறது.
6) வால் இல்லாத விந்தணுக்கள் (அக்காடேட்): இவை பெரும்பாலும் இயக்கமற்ற நிலையில் காணப்படும்.
7) பல பாகங்கள் கொண்ட விந்தணுக்கள்: பல தலைகள் அல்லது வால்களைக் கொண்டிருக்கலாம். இது நச்சு ரசாயனங்கள், சீசியம், காட்மியம் போன்ற கன உலோகங்கள் துறையில் வேலை பார்ப்பவர்கள், தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவர்கள் அல்லது ஆண்களில் அதிக புரோலாக்டின் ஹார்மோன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு நிலை ஆகும்.
8) சுருண்ட வால் விந்தணு: இந்நிலையில் பாக்டீரியா தொற்றுக்களால் விந்தணுக்களின் வால்கள் சேதமடைந்திருப்பதால், அவைகளால் நீந்த முடியாது. அதிக புகைப்பிடித்தலும் சுருண்ட வால் விந்துவோடு தொடர்புடையது.
9) பெரிய, வீங்கிய நடுப்பகுதியுடைய விந்தணு: இதில் விந்தணுவின் ஆற்றல் மையமான மைட்டோகாண்ட்ரியா, ஏ.டி.பி பாதிப்படைந்து இருக்கும். குரோமோசோம்களை நகர்த்துவதற்கான வழிகாட்டுதல் அமைப்பான சென்ட்ரியோல்கள் இல்லாமல் இருக்கலாம்.
10) தலையற்ற விந்தணுக்கள்: இவை ஏசெபாலிக் விந்து அல்லது தலை துண்டிக்கப்பட்ட விந்து என்று அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு மரபணு பொருள் அல்லது குரோமோசோம்கள் இல்லை.
விந்தணுக்களின் உடலமைப்பை அதிகரிக்கும் வழிமுறைகள்:
தளர்வான உடைகளை அணிதல், உடற்பயிற்சி செய்தல், சீரான உடல் எடையை பராமரித்தல், மன அழுத்தத்தைக் குறைக்க உளவியல் ஆலோசனைகள் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் சட்டவிரோத மருந்துகளைத் தவிர்க்கவேண்டும். காபின் பொருட்களை தவிர்க்கவேண்டும். சூடான வெந்நீர் குளியல் மற்றும் நீராவிக்குளியலை தவிர்க்கவேண்டும். ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவு வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்.
சித்த மருத்துவம்:
1) பூனைக்காலி விதைச்சூரணம் 1 கிராம், பூரணச் சந்திரோதயம் 100 மி.கி., நாகப் பற்பம் 100 மி.கி., இவைகளை தேன் அல்லது பாலில் இரு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) சாலாமிசிறி லேகியம் 1-2 கிராம் வீதமும், முருங்கைப்பூ லேகியம் 1-2 கிராம் வீதமும் இருவேளை சாப்பிட வேண்டும்.
