விஜய் ஹசாரே கோப்பை: கெய்க்வாட் அபார சதம்.. சர்வீசஸ் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி

3 hours ago 3

மும்பை,

32-வது விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) ஜெய்ப்பூர், மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஜனவரி 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் நடப்பு சாம்பியன் அரியானா, மும்பை உள்ளிட்ட 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.

இதில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான மராட்டியம், சர்வீசஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மராட்டியம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சர்வீசஸ் அணி, மராட்டியத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 48 ஓவர்கள் முடிவில் 204 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் மோஹித் அஹ்லாவத் 61 ரன்கள் அடித்தார். மராட்டியம் தரப்பில் பிரதீப் தாதே மற்றும் சத்யஜீத் பச்சாவ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மராட்டிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கெய்க்வாட் மற்றும் ஓம் போசலே களமிறங்கினர். இவர்களில் கெய்க்வாட் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். பெரும்பாலான பந்துகளை அவரே எதிர்கொண்ட நிலையில் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இதனால் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது.

மறுமுனையில் ஓம் போசலே 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியில் பட்டையை கிளப்பிய கெய்க்வாட் சதம் அடித்து அசத்தினார். முடிவில் வெறும் 20.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த மராட்டியம் 205 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. கெய்க்வாட் 148 ரன்களுடனும் (74 பந்துகள்), சித்தேஷ் வீர் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

Read Entire Article