சென்னை,
விக்கிரவாண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில், நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய், பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் தனது இரண்டு கண்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குழப்பத்தில் இருக்கிறார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய் குழப்ப நிலையில் இருக்கிறார். விஜய்யின் பேச்சில் தெளிவு இல்லை. தேசியத்தை குழப்பமாக கையாண்டு இருக்கிறார். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் விஜய் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை. தி.மு.க. போலி திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறது, அதனால் தான் குடும்ப அரசியல் குறித்து விஜய் பேசியுள்ளார்.
ஆட்சியில் பங்கு கோரி, கட்சி தலைமை உத்தரவிடாமல், காங்கிரஸ் நிர்வாகி கடிதம் எழுத முடியுமா..? " என்று அவர் கேள்வி எழுப்பினார்.