சென்னை: விக்கிரவாண்டி பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் கைதான பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிவுநீ்ர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து போலீஸார் சந்தேக மரணம், பணியில் அஜாக்கிரதையாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பள்ளித் தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, ஆசிரியர் ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.